பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140 ❖ லா. ச. ராமாமிர்தம்


 'கிச்சு கிச்சு' மூட்டிக் கொண்டு, பொய்களை ஸ்தாபித்துக் கொள்கிறோம்.

  உஷையே ஒரு மாதிரியான ஆசாமி. அவளுடைய இயல்பு இப்படித்தான் என்று கணிப்பதற்குச் சிரமமானவள்.
 ஆனால், அவளுக்கு வாழ்க்கையில் சித்தாந்தம் இல்லாமல் இல்லை. எல்லாம் எனக்கே வாழ்க்கையைப் பணயமாய் வாரிக்கொள்ள முடியாது. எப்பவுமே எனக்கு அனுகூலமாய்ச் சீட்டு அமையாது. ஓரளவு விட்டுக் கொடுக்கத்தான் வேண்டும். எனக்குத் தெரியாதா? ஆனால், விட்டுக் கொடுப்பதற்கு அதனதன் எல்லையைத் தன்னுள் வகுத்திருந்தாள். அதற்கு மேல் No. வானமே இடிஞ்சு விழுந்தாலும் No. சித்திரத்தைவிடச் சுவர்தான் முக்கியம்.
 ஆமா, எதனோடேயும். அப்பளத்து மாவு மாதிரி ஏன் ஈஷிக்கணும்! அதில் என்ன அர்த்தம் இருக்கிறது? பார்க்கப் போனால், பின்னால் அலுப்பு, ஏமாற்றம், த்ரோகம், அவஸ்தை என்று நஷ்டம்தான் மிச்சம்.
 அவளுள் ஒரு பத்ரப்ரதேசம் இருந்தது. அங்கு யாரும். கணவர்கூட அனுமதியில்லை. Out of Bounds-Prohibited area. அதன் மையத்தின் அமைதியில் வீற்றிருக்கத்தான் ஆசை,சுகம்.
 அதனால் சுயநலக்காரி, சோம்பேறி என்று அர்த்தமல்ல. வீட்டை அவ்வப்போது தானே அலம்பி, தானே சுத்தப் படுத்தி, காத்ரெஜிலிருந்து புடவை துணிமணிகளை எடுத்துக் கீழே போட்டு, மறுபடியும் மடித்துப் புதுப்புது விதமாய் அடுக்கி, தான் உண்டு. தன் காரியமுண்டு. முசுடுமல்ல. அதற்காகக் கைகொட்டி, வாய் விட்டுச் சிரிப்பவள் அல்ல. நான் மலிவுப் பண்டம் இல்லை. எனக்கு என் கௌரவம், என் நிறைவு, என் பத்ரம், என் சுத்தம், என் ஒழுங்குப்பாடு உண்டு.