பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேண்டப்படாதவர்கள் ❖ 149




இரண்டு வண்ணாத்திப்பூச்சிகள் ஒட்டி, நாலு இறக்கைப் பூச்சியாய்ப் புதருக்குப் புதர் பறந்தன. பூக்களிலிருந்து அவற்றின் யக்ஷர்கள் எட்டிப் பார்த்தார்கள். மரங்களின் தேவதைகள் அஞ்சலியில் நின்றனர்.

அந்த மஹாபுருஷன்-எவனுடைய சௌந்தர்யத்தின், சௌர்யத்தின்,கருணையின் உருவகமாக நாங்கள், எங்கள் கற்பனையில், அவரவர் மணாளனின் உருவைமுடை கிறோமோ-அவர் வந்து விட்டாரா? பின்னாலிருந்து யாரோ தோளைத் தொட்டாற் போலிருந்தது. கலசம் பொங்கிய ஆனந்தத்தில் மூர்ச்சையானாள். கண்களில் தாரை தாரையாய் வழிந்தது. நினைவு மீண்ட போது எல்லாம் பழைய நிலையில்தானிருந்தன. அவளுடைய தருணம் வந்து போய்விட்டது.

ஒருநாள் பையனைக் காணோம். உஷைக்கு மூணு மணிக்குத்தான் நினைப்பே வந்தது. கிருஷ்ணா போனபின் அவனுக்கே கால் நீண்டு விட்டது. "எங்கேடா?" கேட்டால் பதில் கிடையாது. அழுத்தம். அக்கம்பக்கத்தில் அவன் வயதுக்குச் சினேகிதமில்லை. அதன் சுபாவத்துக்கு யார் நண்பர் இருப்பர்? இன்னிக்கு வந்தால் கவனிக்கிறபடி கவனிச்சுட வேண்டியதுதான். போனால் போறதுன்னு விட்டால் தலைக்கு மேலே ஏர்றது மூர்க்கம், திருப்பிக் கை மிஞ்சிடுத்துன்னா? பயம்தான். ஆனால், இப்பிடியே விட்டுட முடியாதே! சரி வரட்டும். சாக்கடைத் தண்ணிக்குப் போக்கிடம் ஏது?

இருள் இறங்கிப் போச்சு. உஷைக்கு வயிற்றுள் குதிரைக் குட்டி உதைக்க ஆரம்பித்துவிட்டது. பின்புறத்தில் ஏதேனும் மரத்தடியில் படுத்துத் தூங்கிட்டானா இல்லை. வேறே ஏதேனும்-நினைக்கவே பயந்தாள். அவர் ஆபீசிலிருந்து வந்ததும் அக்கம் பக்கத்து ஓரிருவர் ஒத்தாசையுடன்