பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்த்ரஸ்தாயி : 191

இன்னும் சற்று நகர்ந்தேன், பள்ளத்தில் சரிந்தேன். அந்த நினைப்புக்கே உடம்பு உதறல் எடுக்கிறது. ஆனால் கண்ணன் என் தோளைத் தொட்டுக் கொண்டிருக்கிறான். அதன் தைரியமே எனக்குப் போதும். எதற்குமே போதும்.

பழக்க வழக்க நேரங்களில் ஒழுங்கு படிந்தவர்களுக்கு ஒரு சங்கடம். அந்த நேரம் பிசகினால் அவர்கள் பாடு திண்டாட்டம். கண்ணனின் கேலிக்குக் கோபித்துக் கொள்வதில் பயனில்லை. “என்னைப் பாருங்கள். எது எது எப்பெப்போ எப்படி எப்படி வருகிறதோ அது அதற்கு adjust ஆகி விடுவேன்.

வாழ்க்கையே அட்ஜஸ்ட்மெண்டின் தொடர்ச் சங்கிலி தானே! உடல் கூறுகள் மட்டுமல்ல; நேர்மை, நாணயம் இத்யாதி லக்ஷயங்கள், ஆசைகளையும் சேர்த்துத்தான் சொல் கிறேன். எல்லாமே காலப் போக்குக்குக் கட்டுப்பட்டவை தான். நாம் எல்லோருமே சந்தர்ப்பங்கள், சூழ்நிலையின் விளைவுதான். இதற்கு அடுத்து இது என்று கேவலம் பழக்க வழக்கங்கள் நம் தன்மையை நிர்ணயித்து விட்டால், அவை களின் சக்கரத்தினின்னு விடுபடுவதற்கோ, முன்னேற்றத் திற்கோ முற்றுப்புள்ளிதான். முன்னேற்றம் என்பது என்ன? மாற்றம்தான் முன்னேற்றம்.”

ஒரு வழியாக நீர் இறங்கியானதும் (அப்பாடி) என் கால்களில் தண்ணிரை வீசி அடிக்கிறான். நியாயமாய் என் வேலை. ஆனால் அவன் செய்கிறான். எனக்கும் வேண்டி யிருக்கிறதோ?

உள்ளே நடத்தி வந்து கட்டிலில் அமர்த்துகிறான். குடிக்கிற பாவனையில் கை விரல்களை மடக்கி, கட்டை விரலை மட்டும் நீட்டிக் காண்பிக்கிறான். ஆம் என்று தலை யசைக்கிறேன். அலமாரியிலிருந்து பாலை எடுத்து வந்து அடுப்பில் ஏற்றி விட்டு ரேடியோவை F.M.க்குத் திருப்பு