பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்த்ரஸ்தாயி & 197

என் நெஞ்சைத் துருவ, நான் விழித்துக் கொண்டிருக் கிறேனா, தூங்குகிறேனா?

தூக்கத்தில் காணும் கனாப் பொழுதில் மனிதன் அவன் ஆயுசை அதன் முழு விவரங்களுடன் வாழ்ந்து விட முடியும் என்று மனோதத்விகள், கனவு விற்பன்னர்கள் கூறுகிறார் கள்.

இந்த நினைப்பின் அடிக்கோலாய், என் உடம்பு ஒரு தந்தி வாத்யம். அதன் நரம்புகளினூடே நினைவு, மந்த்ர ஸ்தாயியில் இயங்குகிறது. ஆழங்களுக்குத் தன்னோடு என்னை இழுத்துச் செல்கிறது. ராவணனின் ஸாம கானம்.

ஸாம கான வினோத லோலினி.

என் கல்லூரி நாட்களில் ஒரு விடுமுறை. என் தாத்தா பாட்டியுடன் தங்குவதற்குக் கிராமத்துக்குச் சென்றிருந்தேன்.

ஸ்டேஷனிலிருந்து, வயல்களின் வரப்பு வழி விரையும் வழியில் தாமரைக் குளம். அதைத் தாண்டாமல் ஊர் போய்ச் சேர முடியாது. உச்சி வெயிலில் முகம் எரிந்தது. உடனே தண்ணிரின் நினைப்பில், முகம் கழுவிக் கொள்ளத் தோன்றி விட்டது. குளக்கரை மேட்டுக்கு ஏறினேன்.

நடுக்குளத்தில் ஒருத்தி குளித்துக் கொண்டிருந்தாள். அந்த வேளைக்கு யாரும் வர மாட்டார்கள் என்கிற தைரியம் தான். புடவையைச் சுருட்டி, தோய்க்கிற கல்லில் மேல் வைத்திருந்தது. அவளைப் பார்த்த திடீரில் திகைத்துப் போய் நின்றேன். வான், கிண்ணம் போல், தண்ணிரின் மேல் கவிந்து-பேர்தான் தாமரைக்குளம். ஒரு தாமரை யில்லை-அந்த வெயிலுக்கும், வேளையின் தனிமைக்கும் அவள் நிலையில், சூழலுடன் இழைந்து போயிருந்தாள். எல்லாமே சேர்ந்து கானல் ஒவியம் போல்.