பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 : லா. ச. ராமாமிர்தம்

கரிய மேனியாள். என்னிலும் வயதினாள். ஆனால் வயஸானவள் இல்லை.

என்னைப் பார்த்து விட்டாள். கன்னங்களில் நாவல் பழச் சிவப்பு குழுமியிருக்கும். யூகம்தான். இந்தத் தூரத்தில் என்ன தெரியும், அவள் சங்கடம் தவிர? அமிழ்ந்து கொள்ளத் தண்ணிரில் ஆழமில்லை. தோய்க்கிற கல் மேல் புடவை தூரத்தில் இருக்கிறது. எட்டிப் பிடிக்கிற மாதிரி யில்லை. ஒடி ஒளிஞ்சுக்கிட கரையோரம் செடியோ புதரோ யில்லை. என்னதான் செய்வாள்? அவள் பாடு சங்கடம் தான்.

ஆனால் சமாளித்துக் கொண்டு விட்டாள். ஒரு சிரிப்பு சிரிச்சாளே பார்க்கணும்! மிரண்டு போனேன். “என்னடா கேடு கெட்டவனே, மானம் கெட்டவனே! பொம்புளேங்க, நாங்க சமையறோமோ இல்லியோ, எங்களைப் பார்த்தா இவங்க சமைஞ்சுடறாங்க” என்றெல்லாம் திட்டவில்லை. ஆனால் அந்தச் சிரிப்பு என்னைக் கன்னத்தில் அறைந்தது. ஒடினேன். துரத்திற்று. ஓ, சிரிப்பே ஆடையாகப் பயன் படுமோ? ஆடையா, ஆயுதமுமா?

அப்புறம் கிராமத்தில், தினமும் ஒருமுறையேனும் என்முன் அவள் வாய்த்தாள். விடிகாலை பால் குவளை யுடன், அல்லது முற்பகல் தலைமேல் கூடையில் தயிர்ச்சட்டி யுடன், இடையர் தெருவா?-அல்ல பிற்பகல் மளிகைக் கடையிலோ. அவளைக் கடந்து நான் விரைகையில், அவள் விழிகளில் குறும்பு கூத்தாடும். உடனே பின்னாலிருந்து வெடிக்கும் சிரிப்பு. தலைகுனிந்தபடி, ஒட்டமாய் நடையைக் கட்டுவேன்.

ஒரோரு சமயம். அவள் சிநேகிதி யாரோடும் இருந்தால், அவள் தோளையிடித்து என்னைக் கண்ணால் காட்டி, இருவரும் கிசுகிசு’. உடனே அந்தப் பீறிட்ட சிரிப்பு.