பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 & லா. ச. ராமாமிர்தம்

சந்தர்ப்பத்தில் அவர்கள் வழிகெட்டுப் போய் அழிந்து போவதுடன் எனக்குச் சம்பந்தமில்லை. தீவிரத்துடன் மட்டுமே சம்பந்தம்.

மானுடத்தில் இன்னொரு விசேஷம்.

பரஸ்பரம் உனக்கு நான். எனக்கு நீ

இத்துள் எத்தனையோ அம்சங்கள் அடங்கும்.

தியாகம், தன்னம்பிக்கை, பொறுப்பு, விடாமுயற்சி, அன்பு, ஆதரவு. சொல்லிக்கொண்டே போகலாம். நானின் பிம்பம். விஸ்தரிப்பு ‘நீ என்கிறேன்.

ஜன்மேதி ஜன்மம் என ஜீவனின் கடையலில் படிப் படியான பக்குவநிலையை அடைந்துவிட்ட பிறவிகளில் மேற்கூறிய அம்சங்கள், அவைகளின் இத்யாதிகள் தனித்தனி யாகவோ கூடுதலாகவோ பரிமளிப்பதைப் பார்க்கிறோம். அந்த நோக்கில் தன்னம்பிக்கையின் அவதாரமாக இதோ பகவான் ராமகிருஷ்ணரைப் பாருங்கள். அல்லது நான் பார்க்கிறேன்.

பகவான் ராமகிருஷ்ணர் மானுடத்தின் சித்தி.

மானுடத்தின் சித்தியே முத்தி நிலை.

முத்தி என்பது என்ன? விடுதலை.

எதனின்று விடுதலை? பிறகு அதற்கு வருவோம். அதை முற்றிலும் விளக்க முடியாது. என்னால் முடியவே முடியாது.

ஆனால் ஒன்று சொல்வேன். மனிதன்தான் தெய்வ மாகிறான் என்ற கணிப்புக்கு என் எழுத்தைப் பயில்வதன் வழி, எப்பவோ வந்து விட்டேன். அந்த முடிவை மாற்றிக் கொள்ளும்படி எனக்கு இதுவரை எதுவும் நேரவில்லை.