பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 & லா. ச. ராமாமிர்தம்

“யாரும் பசியோடு இல்லாதபடி அப்படி ஒரு வரம் இருக்காதா?”

குருதேவர் சிரித்தார். “முடியாது மகனே. கூடவும் கூடாது. பசியே அற்றுப் போனால் வாழ்க்கை அசைவற்றுப் போய்விடும். அப்புறம் உயிருக்கே என்ன வேலை? பசி என்கையில் வயிற்றுப்பசி தவிர என்னென்னவோ வேறு பசிகள் இருக்கின்றன. வயிற்றுப் பசியைவிட உயர்ந்த பசிகள், தேடல் பசிகள். அவைகளை விளக்க உனக்கு இப்போது வயதாகவில்லை. உயிரை வளர்க்க வயிற்றுப்பசி அவசியம். மற்ற பசிகளை வளர்க்க, அவை நிறைய, அதனால் லோகம் rேமமடைய உயிர் வேண்டும். உயர்ந்த பசிகள். தேடல் பசிகள். எல்லாம் நிறைந்தவன் ஆண்டவனே இன்னமும் தியானத்தில் இருக்கிறான்.”

“தியானம் என்றால் என்னவென்று தெரியும். தவம். கடவுள் எல்லாம் நிறைந்தவர் தியானத்தில் என்ன தேடு கிறார்?”

“தன்னை.” அவருக்கு மெய்சிலிர்த்தது.

“ஓ!” பையன் முகம் மாறிற்று. “பகவானே தன்னைத் தேடிக் கொண்டிருக்கிறாரானால் அவனவனும் தன்னை அவனேதானே தேடிக்கொள்ள வேண்டும்?” பதிலுக்குக் காத்திருக்கவில்லை.

அவன் நெற்றி ஒளிவீசிற்று.

“குருதேவா, புரிந்துவிட்டது. என்னைப் புலி விட்டது. அப்பா அம்மா புலி, பாமினி புலி, மானின் புலி, புலியின் புலி இன்னும் என்னென்ன புலிகளோ அத்தனையும் விட்டு என் தேடலுக்கு விடுதலையாகி விட்டேன். விடைபெற்றுக் கொள்கிறேன்.”

“குழந்தை, அதற்கும் அருள்வேண்டும். அவசரப் படாதே.”