பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் : 265

மூன்று வருடங்களுக்கு முன் நடந்த என் சதாபிஷேகத்தி னின்று இரண்டு நினைவுகள் பிதுங்குகின்றன.

ஒன்று:- ஜபித்த குடம் ஜலத்தையும் என் தலை மேல் கொட்டினதும், சேகர் அவசர அவசரமாய் என் தலையைத் துவட்டினது. “இதே சாக்காக அப்பாவுக்கு மண்டைச் சளியோ மார்ச்சளியோ பிடித்துக்கொண்டு விட்டால்? அதனால்தான் எனக்கு இந்தச் சடங்குகளில் நம்பிக்கை யில்லை. ஆனால் நீங்கள் இரண்டுபேரும் எங்கே சொன்ன தைக் கேட்கிறீர்கள்?”

அடுத்து:

அம்பாள் ஸ்ன்னிதானத்தில் மூன்றாவது தாலியைக் கட்டுவதாகத் தீர்மானம். என் இஷ்டம் அதுதான்.

குடும்பம் ஸ்ன்னிதானத்துக்கெதிரே, கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காகப் போட்டிருக்கும் கிராதியண்டை குழுமிவிட்டது. இங்கு ஏதோ விசேஷம் நடக்கப்போகிறது என்று நெரிசல் வேறே. கர்ப்பக்ருஹத்தின் அறையிருளில் அவள் உருவத்தில் எல்லைக்கோடுகள் தெரிந்தும் தெரியா ததுமாய்.

குருக்களுக்கு ஏற்கனவே ஏகப்பட்ட வேலை.

என்னிடம் அவசரமாய் வருகிறார்.

‘மாங்கல்ய தாரணத்தை முதல்லே முடிச்சுண்டுடு வோமா, இன்னும் பத்து நிமிஷத்துலே எமகண்டம் வரது. அபிஷேகம், அர்ச்சனைக்கு யமகண்டம், ராகுகாலம் எல்லாம் கிடையாது.”

“நீங்கள் சொல்றபடியே.”

எழுந்து நிற்கிறேன். மாங்கல்யத்தைச் சரடுடன்-இது வரை அம்மன் பாதத்தில் வைத்திருந்ததை எடுத்து என்னிடம் கொடுக்கிறார்.