பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 ❖ லா. ச. ராமாமிர்தம்

அவருடைய கீழுதடு புன்னகையில் லேசாய்ப் பிதுங்
கிற்று. கசந்த புன்னகை.

“பரவாயில்லை, உட்காரு உன்னை ரொம்ப நேரம்
நிறுத்தி வெக்க மாட்டேன். உக்காரு.”

மனமில்லாமல் அருகே உட்கார்ந்தாள். பெரியவர்
சொல்றாரு. சுற்றுமுற்றும் பார்த்தாள். ஒரு ஆள் கூட
நடமாட்டமில்லை. இந்த ரோட்டே சத்தே அடக்கம்தான்.
குறுக்கு ரோடு. ஆனால் இந்தப் பக்கம் வந்து நாளாச்சு.

கிழவர் பக்கம் திரும்பினாள். அந்த மாதிரி நிறம்
பார்த்ததேயில்லை. சுண்ணாம்பாட்டம் வெள்ளை
வெளேர்னு. அதிலும் வெள்ளை முடி. கோராப்பட்டு
நூலாட்டம் பளபளன்னு, அடர்த்தியா, தூக்கி அளுந்த
பின்னுக்கு வாரி கழுத்தா மட்டையிலே குஞ்சம் குஞ்சமாத்
தொங்குது. முகத்துலே எலும்புச் சதை என்ன இம்மா
பிகித்தம்-தொட்டால் ரத்தம் பிச்சுக்குமாம் போல்!

“ஐயா, என்ன வேணும்?”

“நான் செத்துப் போகப் போறேன்.”

தூக்கிவாரிப் போட்டது. “என்ன ஐயா சொல்றீங்க?”

“ஆமாம், உன்னை ரொம்ப நேரம் காக்க வைக்க மாட்டேன்.”

“ஐயா, விசம்கிசம் குடிச்சிட்டீங்களா?”
“சே!” கையை அலஷியமாக வீசினார்.
“இந்த வயசிலா? வயசாயிட்டுது. வேளை வந்துட்டுது. போறேன்.”

“எனக்குப் பயமாயிருக்கய்யா?” கையைப் பிசைந்தாள்.

“பயப்படாதே. பயப்படும்படியாவா இருக்கேன்? உயிர்
போனப்பறம்கூட, பயப்படும்படி இருக்க மாட்டேன். அந்த
மட்டும் நான் கிடக்காமல், நாறாமல் போறேன். ஆனால்