பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலைகள் ஓய்வதில்லை ❖ 49


முப்பத்தி அஞ்சு வயசுலே ஒரு கல்யாணமா?” குலுங்கிக் குலுங்கி அழுதாள். இப்போது தனக்கும் சேர்த்து.

“மாமா எப்படி இருக்கார்?” அசட்டுக் கேள்வி.

“இருக்கார். யார்தான் என்ன பண்ண முடியும்? ஆனால் நான் அவர் எதிரே நடமாட நேரும் போதெல்லாம் அவர் கண்கள் மெளனமாய்க் குற்றச்சாட்டுடன் என்னைப் பின் தொடருவதாக எனக்குத் தோணும். எப்படியும் எனக்குக் குத்தமுள்ள நெஞ்சுதானே! அவன் அழைச்ச போதே, நானும் அவனோடு அலையில் நின்னிருந்தால் நானும் அவனோடு போயிருப்பேனோன்னோ! இப்படி இங்கே வந்து ஒக்கார்ர போதெல்லாம் பிராயச்சித்தம் பண்ணிக்கறதா நெனச்சுக்கறேன். ஆனால் இது பிராயச் சித்தம் ஆகுமா? இப்போ நானும் விழுந்துட்டாலென்ன? ஒரொரு சமயம் தோணறது. ஆனால் உசிர் வெல்லமா யிருக்கே! மானம் ஆறிப் போச்சு. ஊசிப் போன பண்டம். பொய் மறுபடியும் கவிஞ்சுண்டுடுத்து. அலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கறதுடன் சரி.”

சொல்லிக் கொண்டே எழுந்தாள். நானும் எழுந்தேன். மணல் கடந்து செல்கையில், ஏன், அப்புறமே நாங்கள் பேசவில்லை. ரோடு வந்ததும் சொல்லி வெச்சாப்போல, அவளுடைய பஸ்ஸும் வந்தது. ஏறிப் போயிட்டாள்.

அப்போதிலிருந்து நடந்து வரேன் பசி ஒய்ஞ்சு வெறும் வயிறு இழுத்துப் பிடிச்சுண்டு வலிக்க ஆரம்பிச்சுடுத்து. சேர்ந்தாப் போல் நடக்க முடியல்லே. அங்கங்கே உட்காந்து-என்ன இவ்வளவு தூரமா? வீடு போய்ச் சேர்வேனா?

வழியில் எத்தனை கார், லாரி பறந்தது. lift கேட்டிருக் கலாமோ? முதல்லே பழக்கமில்லை-அதுக்கெல்லாம் ஒரு தனி சாமர்த்தியம் வேணும். இப்பத்தான் தோணறது.