பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv

கதை எழுதி முடிக்கும் வரை எனக்கு சிரத்தை. அதற்குப்பின் எனக்குத் தொடருவதில்லை. ஆனால் வாசகர்கள் கடிதம் எழுதியோ நேரில் வந்தோ அதன் மூலம் அவர்களுக்கு நேர்ந்த பாதிப்பைத் தெரிவிக்கையில் மகிழ்ச்சியாகத்தானிருக்கிறது. அம்மா சொல்லுவாள் வாயுள்ள குழந்தையானால் பிழைத்துக் கொள்ளட்டும். இதில் எவ்வளவு அர்த்தங்கள் அடங்கியிருக்கின்றன என்று இப்பத்தானே தெரிகிறது. ஆகவே நீங்கள்தான் என் கலையைப் போஷித்தீர்கள். விருட்சம் ஆக்கினீர்கள்.

இந்தத் தொகுதிக்கான சரக்கை ஒன்று சேர்க்க கண்ணன் ரொம்பவே சிரமப்பட்டு விட்டான். அவன் எனக்குத் தார்க்குச்சிப் போட்டுக் கொண்டேயிராவிட்டால் இந்தத் தொகுதி வெளிச்சம் கண்டிருக்காது.

ஆனால் இதில் கண்ணனுடைய கைங்கர்யம் மட்டுமில்லை. பலபேரின் அன்புப் பணியின் 'உரு'தான் இது. திருமதி வாசந்தி, திரு வானதி திருநாவுக்கரசு அவர்கள், திரு வானதி ராமு அவர்கள், என் மருமகன் திவாகரன் (என்ன அழகான கையெழுத்து) கண்ணன் என்கிற சப்தரிஷி (எனக்கு மகனானாலும் நன்றிக் கடன் எனக் கில்லையா?).

இப்போது இதைப் படிக்கப் போகும் நீங்களும் இவர்களுடன் சேர்ந்துவிட்டீர்கள். இதைக் காட்டிலும் என்ன பெருமை நிறைவு வேண்டும்? என் பெற்றோர்கள் என்னை வளர்த்த முறைக்கும் என் மேல் வர்ஷித்த பாசத் திற்கும் சற்றேனும் தகுதியாயிருப்பேன் என்று நினைக்கிறேன்-இது கூடப் பெரிய வார்த்தைதான்-ஆசைப்படுகிறேன்.