3. அலை தந்த ஆறுதல்
மாலை மணி ஐந்தடித்தது. தேனைத் தொட்டுக்க: தண்ணியத் தொட்டுக்க’ என்று பழகும் அலுவலக நட்புக் கூட்டத்தை விட்டு வெளியே வந்தேன். வாழ்க்கை நாடகத்தின் ஒரு வேடம் மாறி அடுத்த வேடம் தொடங்கியது. ஒருவர் அவசரம் அவசரமாக வந்தார். ‘சார்! பையை மறந்துப்புட்டீங்களே"யென்று பரிவோடு தந்துவிட்டுப் பதினைந்து ரூபாய் கடன் என்ற பேரில் வாங்கிக் கொண்டு போய்விட்டார். கடவுளின் தரிசனத்திற்காக ஏங்கும் மக்களைவிட, வாடகை வீடு பிடிப்போரும், ஏதாவது ஒரு வேலைக்கு ஏங்குவோரும் தான் அதிகம். அவர்களைப் போலவே நான் போய்ச் சேரவேண்டிய இடத்திற்குரிய பேருந்திற்காகப் பரிதாபமாகக் காத்திருந்தேன். பஸ் எப்போது வேண்டுமானாலும் வரட்டும். கவலையில்லை! ஆனால் அதற்குள் வாகனங்களின் ஒலிகள், “வாழ்க!” “ஒழிக” கோஷங்கள், “ஐயர் சாமி தருமம் போடுங்க’ என்று சொல்லி என்னைக் கடையெழு வள்ளல்களில் ஒருவனாக்கப் பிச்சைக்காரர்கள் எடுக்கும் முயற்சி,பார்த்து விட்ட பாவத்திற்காக, எப்போதோ நான் தெரிந்தோ தெரியாமலோ செய்த உதவிக்காகச் சிலருடைய செயற்கை “ஹி ஹி'க்கள், தெருப்பாடகர்களின் உள்ளம் நிறைந்த ஆனால் வயிறு ஒட்டிய பாடல்கள் எல்லாம் என்னைச் சிந்தனையளவில் காபி ஒட்டல் மிக்சரை நினைவு படுத்தின. “நாட்டில் ஒழுக்கம் இல்லை; அறம் இல்லை; நியாயம் போய்விட்டது” என்று நான் கேட்காத போதே என்னிடம் பேசிய ஒரு பெரியவர், பேருந்து வந்ததும்