உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5. நீர்க்கம்பி



மழையென்றால் எனக்குத் தமிழைப் போல் உயிர். ஏன்? அதிலும் ‘ழ'கரம் இருக்கிறதே என்பது மட்டும் காரணமில்லை... நான் என் வீட்டுத்தோட்டத்திலே வைத்திருக்கும் மரம், செடி, கொடிகள் வளர்வதற்கு அடிப்படையாக இருப்பதால்... நான் பழகும் மனிதர்கள் மனிதர்களாக இல்லை... ஆனால் மரங்கள் மரங்களாகவே இருக்கின்றன. இலை, கிளை, பூ, கனி ஆகிய இவற்றின் மீது துளிகள் பட்டாலும் வேர்வழி வரும் நீரையே அவை ஏற்று முறைமையாக வாழ்கின்றன. ஆனால் மனிதனுக்கு இதுமாறாக உள்ளதே! வாய் வழிப் பருகும் பழக்கத்தைக் கொண்டு மழை நீரையே உட்கொள்ள முடியாத உடல் நிலையைப்பெறுகின்றான். நான் அப்படியில்லை... மழையில் நனைவதை ஒர் இலக்கிய நுகர்ச்சியாகக் கருதுகிறேன்.

சிறுவயதில் ஒருமுறை தந்தையார் கடிதம் எழுதிக் கொடுத்துக் "தபால் பெட்டியில் சேர்த்துவிடு?” என்றார். முகத்தில் சினம் தெரிந்தது. விலாசம் உள்ளபக்கம் மடிந்திருக்கும்படிச் செய்து சட்டைப்பைக்குள் வைத்துக் கொண்டேன். கண்ணை மூடிக்கொண்டு பேருந்து வண்டியின் ஒட்டுநராக என்னைக் கற்பனை செய்து ஒலியெழுப்பிக்கொண்டே ஒடியபோது, மழை என்னை விட்டுவைக்கவில்லை. கல்லூரி விரிவுரையாளரின் பேச்சைப் போல் தொடர்ந்து பெய்தது. பழங்காலத்தமிழிலக் கியங்கள் சிலவற்றைக் கடல் கொண்டதைப்போலக் கடிதத்தின் எழுத்துக்கள் சிலவற்றை மழைகொண்டது. கவலைப்படாமல் பெட்டியில் போட்டுவிட்டேன். ஒரு