பேச்சாளரைவிடக் கேட்பாளர்களுக்குத்தான் மதிப்பு அதிகம் என்ற வாழ்வியல் சித்தாந்தத்தை நன்கு அறிந்தவர் மேடை மென்குரலோன். பேசுகின்ற கால அளவு குறைவாக இருந்தாலும், அதை எப்படிப் பேச வேண்டும் என்பதற்காக மிகுதியான நாட்கள் எடுத்துக் கொள்வார். பேச்சின் ஒவ்வொரு தலைப்பும், பெண் தலையிலே சூடிக்கொள்ளும் பூப் போன்றது! கரும்புச் சக்கையிலும் கணக்கற்ற எரிசக்தியுண்டென்று உணர்த்திய அறிவியல் நுட்பரைப்போல, பழைய புத்தகக் கடைக் காரர்கூட ஏற்க மறுக்கும். வாசகரோடு வாழ்க்கைப் படாத கதைகளையும் கவிதைகளையும் எப்படியோ படித்து அவற்றையுலகறியச் செய்வதில் இவர் ஒர் அறுகால் பறவை.
அந்தப் பேச்சரங்கக்காரர்கள், நடப்பியல் நாடக உத்திகளை நன்கு கற்றவர்கள். அவ்வரங்கமே, அந்தியங் காடியில் பறவை ஒலிகளின் ஒன்றியம்போல் விளங்கும். பேருந்து நிலையத்திற்கும், ஒப்பனையும் ஒப்பந்தமும் இல்லா உலகியல் நிகழ்வைத் திரையில் கலையாக்கி நிழலாடச் செய்யும் சொகுசுக் காட்சியரங்கிற்கும், காற்றைப் போல் விரைவாகச் சென்றாலும் பாதையை விட்டு விலகாத புகைவண்டி நிலையத்திற்கும் இடையில் அமைந்திருந்தது. “நாம் எங்கே இருக்கிறோம்? ஏன் இங்கு வந்தோம்” என்று தெரியாத பாங்கற் கூட்டத்தின் எண்ணிக்கையை உயர்த்துவதில் உயர்ந்தவர்கள். அப்படிப் பட்டவர்கள் அழைப்புவிடுத்தால், தகுதியையும் திறமை