பக்கம்:அழகர் கோயில்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கோயிலும் கள்ளரும் 83 முன்னரே கள்ளர் அழகரின் ஊர்வலத்தை மறித்த நிகழ்ச்சி நடந்திருக்கவேண்டும். கி.பி.1775இல் திருமோகூர் காளமேகப் பெருமாள்கோயில் விக்கிரகங்களை ஆற்காட்டு நவாபின் படைகளும் ஆங்கிலேயப் படை களும் கொள்ளை பிட்டுக் கொண்டு போய்விட்டன. மீண்டும் அப்படைகள் திரும்ப வடக்குநோக்கில் செல்லும்போது "திருமோகூர் விக்கிரகங்களை ஒட்டகையின்பேரில் போட்டுக்கொண்டு போகிற போது அழகர்கோயிற் பாதையில் நாட்டுக்கள்ளர் வந்து விழுந்து விக்கிரகங்களைக் கைவசப்படுத்திக் கொண்டு கோயிலிலே கொண்டு வந்து சேர்த்தார்கள்" என்று மதுரைத் தலவரலாறு கூறுகிறது.33 இதன் பயனாகத் திருமோகூரில் தேரிழுக்கும் உரிமை கள்ளர் களின் ஆறுபிரிவுக் கிராமத்தார்க்கு வழங்கப்பட்டது. அவை, 1. திருமோகூர், 2. பூலாம்பட்டி, 3. கொடிக்குளம், 4. சிட்டம்பட்டி, 5. வவ்வாத்தோட்டம், 6. ஆளில்லாக்கரை ஆகியவையாகும். முதல் ஐந்து கரையாரும் ஆறாவது கரைக்குரிய மரியாதையை ஆளுக்கொரு ஆண்டாகப் பகிர்ந்துகொள்வர். தவிரவும் ஆண்டுதோறும் கஜேந்திர மோட்சம் திருவிழாவுக்கு ஆனைமலை நரசிங்கப்பெருமாள் கோயி லுக்குக் திருமோகூர்ப்பொருமாள் வரும்போது விக்கிரகங்களைக் கள்ளர் மீட்ட செயலுக்காகக் கள்ளர் வேடம் (அழகர் கோயில் போல) புனைந்து வருவர். விக்கிரகங்களை மீட்டுத் தந்ததற்கான மரியாதை இது. அழகர்கோயில், திருமோகூர் ஆகிய இரண்டு கோயில்களிலும் திருமால் 'கள்ளர்' வேடமிட்டு வந்தாலும், அழகர்கோயிலே கள்ளர் சமூகத்தில் பேரிடமும் மதிப்பும் பெறுவதனால், அழகர்கோயில் கள்ளர் வேடமே காலத்தால் முந்தியதாயிருந்தல் வேண்டும். அழகர் கோயில் கள்ளர் வேடத்தைக் கண்டபின்னரே திருமோகூரிலும் அவ்வித மரியா தையினை நாட்டுக்கள்ளர் பெற்றிருக்கவேண்டும் என எண்ணத் தோன்றுகிறது. வெள்ளையர்களிடமிருந்து விக்கிரகங்களை நாட்டுக்கள்ளர் மீட்டது கி.பி. 1755 சூன் மாதத்தில் என ஆங்கிலேயர் ஆவணக் குறிப்புக்கள் கூறுகின்றன.34 எனவே திருமலைநாயக்கர் காலத் திற்குப் பின்னரும் (கி.பி. 1623-1659). கி.பி. 1755க்கு முன்னரும் ஏதோ ஒரு காலகட்டத்தில் அழகரின் ஊர்வலத்தைக் கள்ளர் மறித் திருக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/90&oldid=1467951" இலிருந்து மீள்விக்கப்பட்டது