புடமிட்ட பொன்
93
மாதவன்: ஏன்? லலிதாவின் கலை வளர்ச்சியில் அவர் இவ்வளவு ஆசை கொண்டிருக்கும்போ.......
லகஷ்மி: அவர் ஆசை கொண்டிருந்தால் அதைப்பற்றி எனக்கு என்ன? கொஞ்சங் கூட எனக்கு இஷ்டம் இல்லை.
மாதவன். லக்ஷ்மி, நீ ஒரு நாள் கூட என்னுடன் இத்தனை பிடிவாதமாக இருந்ததில்லையே?
லகஷ்மி: ஆமாம்; இருந்ததே இல்லைதான். அதனாலாவது என் இஷ்டப்படி இந்த விஷயத்தில் விட்டு விடக் கூடாதா?
மாதவன்: லக்ஷ்மி, நீ என்ன சொன்னாலும் நான் லலிதாவை அனுப்பத்தான் போகிறேன்.
லஷ்மி: நீங்கள், என்ன நினைத்துக் கொண்டாலும் சரி; உயிரோடு இதற்கு நான் சம்மதிக்க மாட்டேன்.
மாதவன்:நீ வீணாய் ஏதோ எண்ணிக் கொண்டு கலக்கம் அடைகிறாய். வெளிப் படையாக விஷயத்தைச் சொல்; ஏன் இப்படி உனக்குக் கலக்கம்?
லஷ்மி: (உணர்ச்சியோடு) இது வெறும் வீண் கலக்கம் அல்ல. என் குற்றத்தை உணர்ந்து அந்த வேதனையால் நான் கொண்டிருக்கிற உறுதியான தீர்மானம்.
மாதவன்: நீ ஒன்றும் தவறு செய்து விடவில்லையே, லஷ்மி?
லஷ்மி: நான் செய்யவிருந்த தவறு உங்களுக்குத் தெரியாது.
மாதவன்: (நிதானமாக) லஷ்மி, நான் எல்லாம் தெரிந்து கொண்டுதான் இருக்கிறேன்.
லஷ்மி: (திடுக்கிட்டு) என்ன, உங்களுக்குத் தெரியுமா?
மாதவன்: தெரியும். சந்தேகமாகச் சிறிது இருந்ததெல்லாம் இன்று தெளிவாகி விட்டது. அதற்காகவே லலிதாவை அனுப்ப வேண்டுமென்று வற்புறுத்திப் பேசினேன்.