உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அழகு மயக்கம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யார் விளையாட்டு?

காட்சி ஒன்று

இரவு மூன்று மணி. இருட்டு எங்கும் படர்ந்திருக்கிறது. நஷாத்திரங்களின் மங்கிய ஒளியால் ஒரளவு உருவங்கள் புலனாகின்றன. பின்னால் ஒரு சிறிய ரெயில்வே ஸ்டேஷனும் அங்குள்ள ஒன்றிரண்டு லாந்தர்களும் தோற்றமளிக்கின்றன. தூரத்தில் ரெயில் செல்லும் ஓசை கேட்கிறது. செயிலை விட்டு இறங்கி வந்த ஒரு கிழவியும் அவளுக்குச் சற்று முன்னால் ஓர் இளமங்கையும் நாட்டுபுறப் பாதையில் நடக்க ஆரம்பிக்கிறார்கள். கிழவிக்கு எழுபது வயதிருக்கும். கையில் ஒரு துணி மூட்டையை வைத்துக்கொண்டிருக்கிறாள். அவள் சுற்று முற்றும் பார்ப்பதிலிருந்து வழித்துணை தேடுவதாக அறிந்து கொள்ளலாம். இளமங்கையின் வயது 24 ஆண்டுகளுக்கு மேல் இராது. நடை உடை பாவனைகள் படித்தவள் என்பதை உணர்த்துகின்றன. தோலினால் செய்த கைப்பெட்டியை அவள் கையில் பிடித்துக்கொண்டு நடக்கிறாள்.

கிழவி : யாரம்மா நீ?.......எங்கே போகிறாய்?

இளமங்கை : (திரும்பிப் பார்த்து) பாட்டீ, என்னையா கேட்கிறீர்கள்?

கிழவி : ஆமாம்...........முத்தநல்லூருக்கு நான் போக வேண்டும். ஒரே இருட்டாயிருக்கிறது; அதனால் யாராவது துணை கிடைக்குமா என்றுதான் பார்க்கிறேன்.

இளமங்கை : முத்தநல்லூருக்கா போகிறீர்கள்? நானும் அங்கே தான் போகிறேன். வாருங்கள் போகலாம்.

கிழவி: நல்ல வேலை! என்னைக் கொஞ்சம் அழைத்துக் கொண்டுபோ. இருட்டிலே எனக்குக் கண் நன்றாகத் தெரியாது. மூன்று மணி ரெயிலிலே வந்து இறங்கி எப்படிப் போகிறதென்று மனசு அடித்துக்கொண்டே இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/26&oldid=1641176" இலிருந்து மீள்விக்கப்பட்டது