பக்கம்:அழியா அழகு.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகவுரை

வேறு எதனையும் எண்ணாமல் தமிழின்பம் ஒன்றனையே எண்ணி இலக்கியக் கடலில் புகுபவர்களுக்குக் கம்பராமாயணம் அமுதத்தைப் போல இனிப்பது. “நம்பு பா மாலையாலே நரருக்கின் றமுதம் ஈந்தான்” என்று கம்பனைப் பாராட்டியவர் உண்டு. கிறிஸ்தவ அன்பர்களும் இஸ்லாமிய சகோதரர்களும் கம்யூனிஸ்டுக் கட்சியினரும் கம்பராமாயணத்தில் இன்பம் காணுகிறார்கள். காரைக்குடியில் ஆண்டுதோறும் நடைபெறும் கம்பன் விழாவுக்குப் போனவர்கள் இந்த உண்மையை அறிதல் கூடும். வேற்று மதத்தினரும் கடவுளைப் பற்றிக் கவலைப்படாத கட்சியினரும் இதை இராமாயணமாகப் பார்ப்பதில்லை; தமிழ்ச் சுவைப் பிழம்பாகக் காணுகிறார்கள், அவர்கள் இராம பக்தர்கள் அல்லர்; தமிழ்ப் பக்தர்கள். அவர்களுக்கே இன்பம் தருவதென்றால் இதை இராமபிரான் கதையாகப் பக்தியோடு படிப்பவர்களுக்குப் பின்னும் இன்பம் கூடுதலாகவே உண்டாகும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

தமிழ்நாட்டில் எந்த ஊருக்காவது ஒருவன் சென்று, நான் தமிழ் படித்தவன் என்றால், அங்குள்ளவர்கள், “எங்கே, கம்பராமாயணத்தில் ஒரு பாட்டுக்குப் பொருள் சொல்லுங்கள்” என்பார்கள். கம்பராமாயணம் படிக்காதவன் புலவன் அல்லன் என்பது அவர்கள் கொள்கை. கம்பராமாயணத்தை நாள் கணக்காக மாதக்கணக்காகப் பிரசங்கம் செய்து பொருளீட்டி இனிது வாழ்ந்தவர்கள் பலர்.

இருபதாவது நூற்றாண்டில் ஆங்கில அறிவு பெற்றதன் பயனாகப் புலவர்களும் அறிஞர்களும் கம்பன் கவிதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/4&oldid=1401248" இலிருந்து மீள்விக்கப்பட்டது