பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

9



புரியவில்லையா! குழப்புகிறீர்கள் என்று கூக்குரல் இடுவது எனக்குக் கேட்கிறது.

ஒருவரது வாழ்க்கையில் உயர்ந்த நிலை அடைய, அறிவை வளர்க்க, ஆற்றலை சிறக்க, திறமையை வளர்க்க, தேர்ச்சி பெற, திட்ப நுட்பத்தில் சிறக்க, இந்த அவமானம் உதவுகிறது என்று, நான் சொல்வது இப்போது புரிகிறதா? குழப்பம் இப்போது இல்லையே!

இன்னும் தெளிவாகவில்லை என்பது எனக்கும் தெரிகிறது.

இப்படிப்பட்ட ஓர் அவமானத்தை யார் நமக்கு இழைக்கிறார்கள்? யாரோ அல்ல? எங்கிருந்தோ வந்து அல்ல.

நமக்கு எதிரில் இருப்பவர்கள்தான், நமக்கு இப்படிப்பட்ட நல்ல காரியத்தைச் செய்கின்றார்கள்.

எதிரில் இருந்துகொண்டே, நமது உயர்வைத் தடுப்பவர்கள், அறிவை கெடுப்பவர்கள், புகழை இடிப்பவர்கள் போன்றவர்கள்தான் நம்முடைய எதிரிகள் என்கிறோம்.

எதிரிகள் என்றால் எங்கிருந்தோ வந்தவர்கள் அல்ல. நமக்கு எதிரிலேயே இருந்துகொண்டு, காரியம் செய்பவர்கள், நமக்கு முன்னே இருந்து கொண்டு நம்மைத் தூண்டிக் கொண்டு இருப்பவர்களைத்தான் நாம் எதிரிகள் என்கிறோம். நமக்கு மனக்கஷ்டத்தையும், மனப்புழுக்கத்தையும், மன அவதியையும் தருகிற செயல்களைச் செய்வதால்தான், அவர்களது செயல்களை நாம் அவமானம் செய்கிறோம்.

இப்படி செய்கிற அத்தனை பேர்களும், நமக்கு எதிரிகள் அல்ல. அவர்கள் செய்கிற காரியங்கள் எல்லாம் அவமானமும் அல்ல. அற்புதங்கள்.

அலங்காரமாக நகர்ந்து வருகிற தேர்ச் சக்கரங்களுக்கு முன்னே முட்டுக்கட்டைகள் போட்டு, தேரை சரியாக ஓட்டி நிலைநிறுத்தச் செய்கிறார்களே, அவர்கள் அந்தத் தேருக்கு எதிரிகள் இல்லையே!