பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3. உனக்கு என்ன தெரியும்?

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பார்கள்.

அவமானப்படுத்த விரும்புகிற ஆசாமிகளுக்கு எதுவும் ஆயுதமாக அமையும். அவர்கள் விடுகிற அம்போ, ஆவேசமாகப் பாயும் அனலைக் கக்கும், அலறச் செய்யும். அலை புரளும் கடலாக, அச்சுறுத்தி நிலைபெயரச் செய்யும்.

அவமானமும் அப்படித்தான் கேட்போரை கிடுகிடுத்து நடுநடுங்கச் செய்கிறது. நெஞ்சத்தின் நிம்மதியைக் கொய்கிறது. ஆமாம். அவமானப்படுத்துகிறவரின் வாயிலிருந்து வருகிற வம்பு மொழி, நமது நம்பிக்கையை நாசமாக்கவே வருவதுதான்.

உங்களுக்கு தெரியும் என்று நீங்கள் நினைத்தும் நெகிழ்ந்தும் மகிழ்ந்தும் கொண்டிருக்கிற ஒன்றை, மரண அடி கொடுத்துச் சாய்க்கின்ற சமத்கார காரியத்தைத்தான் அவமானப்படுத்துகிறவர்கள் எல்லோரும் அநாயாசமாகச் செய்துவிடுகிறார்கள்.

என் வாழ்வில் எத்தனையோ அவமானங்களைச் சந்தித்திருக்கிறேன். நின்றாலும் அவமானம் நடந்தாலும் அவமானம் சென்றாலும் அவமானம் சொன்னாலும் அவமானம். அப்படித்தான் பலப்பல அவமானங்களை சந்தித்திருக்கிறேன்.

இவையெல்லாம், இப்படிப்பட்ட அவமானமெல்லாம் எனக்குத் தெரிந்தவர்கள் மூலமாக வந்தாலும் பரவாயில்லை. யாரோ ஒருவர், தெரியாத ஒருவர், நான் நம்பிக்கையோடு நினைத்து நெருங்கப் பயந்த உயர்ந்த நிலையில் இருப்பவர் இப்படி பலரக மனிதர்கள்.

அவரிடம் நான் எதிர்பார்த்துச் சென்றது சரிதான் அல்லது - சரியில்லை என்ற ஏதாவது ஒரு பதிலுக்குத்தான்.