பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

17


வெள்ளை பேண்ட், வெள்ளைச் சட்டை, கவர்ச்சியாகக் காட்சி தருவார். இயக்குநர் என்றாலும் எதையும் ஈசியாக எடுத்துக் கொள்பவர். ஒரு புகழ் பெற்ற ஹீரோ நடை, கிண்டலடிப்பதில் அசகாயசூரர்.

கல்லூரியில் அவரை தனியே பார்ப்பது என்பது கஷ்டம்தான். சுற்றிலும் இளைஞர்கள் கூட்டம். அவனுக்கோ கல்லூரியானது ஒரு புதிய சூழ்நிலை. கல்லூரியில் மாணவர்களிடம் பேசுவதற்குக் கூட கூச்சம். இயக்குநரிடம் பார்த்துப் பேசுவது எப்படி?

இந்த நடக்க முடியாத காரியத்தை நடத்தியாக வேண்டும் என்ற நப்பாசைக்குள்ளே ஒரு வாரமாக அவன் தவித்துக் கொண்டிருந்தான். தைரியத்தை வரவழைத்துக் கொள்ளவே, அவன் தனிமையில் இருந்து, அந்த வாரம் முழுவதும் தன்னை தயார் செய்து கொண்டான்.

ஒருநாள் மத்தியானம் மூன்று மணி இருக்கும். உடற்கல்வி இயக்குநர் அறையை நோக்கி, கால் தரையைத் தேய்த்துக் கொண்டு செல்ல, தயங்கிப் போய்ச் சேர்ந்தான்.

உள்ளே பலர் இருப்பதாக, உரத்தக் குரலில் சிரிப்புச் சத்தம், வெளியே புயலாக வந்து வரவேற்றது. புகை மண்டலமும் கூடத்தான். உள்ளே அவர் இருப்பதை உறுதியாக்கிப் பறந்தது.

சார் என்றான். குரல் வரவில்லை. காற்றுத்தான் வந்தது. யார்ரா அவன் உள்ளே வா! உனக்கு என்ன வேண்டும்? அதிகாரம் நிறைந்த சிறிது அன்பு கலந்த குரல் அது. அங்கே அவனை யாரும் எதிர்பார்க்கவில்லை. முந்திய நாள் நடந்த ஒரு கைப்பந்தாட்டப் போட்டியைப் பற்றிய பேச்சு அது. அந்தப் போட்டியில் அவர்கள் தோற்றுப் போயிருந்த விஷயம் தெரிந்தது.

பதில் சொல்லாமல் விழித்துக் கொண்டிருந்த அவனை, மீண்டும் அதே கம்பீரக் குரலில் கொஞ்சம் அதட்டலாகவே கேட்டார் இயக்குநர்.