பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

அவமானமா? அஞ்சாதே!



எரிச்சலால் நம்முகம் கடுமையாகி, கருமையாகி, மன உலைச்சல் மருகும்போதும், உருகும்போதும் அவர்கள் அதைப் பார்த்துப் பரவசப்படுவார்கள். தங்களின் படுபாதகச் செயல் என்று அவர்கள் வருந்துவதுமில்லை, திருந்துவதுமில்லை. அதுதான் அற்ப சந்தோஷமாகி, அவர்களை ஆட்டிப்படைக்கிறதே!

இந்த அவமான நிகழ்ச்சியிலிருந்து நாம் ஒன்றை மட்டும் நிச்சயமாகத் தெரிந்து கொள்ளலாம்.

நமக்குள்ளே இருக்கின்ற நல்ல திறமைகளை, அவமானப்படுத்துபவர்கள் துல்லியமாக தெரிந்து கொள்கிறார்கள். அவற்றை நமக்கு அவர்களுக்குரிய பண்பாடு மூலம், அதாவது அன்பை கொச்சைப் படுத்தி, குரூரமுறையில் வெளிப்படுத்தி, நமக்கு கோடிட்டுக் காட்டுகிறார்கள்.

அவர்களை நாம் புரிந்துகொண்டு, நமது திறமையின் தேரோட்டத்தைப் புரிந்து கொள்வோமானால், ஆதாயம் நமக்கு அவமானம் அவர்களுக்கு. ஆமாம், நம்மை முன்னேற்றப்பாதையில் முன்னுக்குத் தள்ளிவிடுகிற மேன்மையாளர்கள் அல்லவா!

அன்றைய சில நண்பர்கள் ஏசிய பேச்சும் ஏச்சும்தான் விளையாட்டு பற்றி என்னை நன்றாக படிக்கத் துண்டியது. இன்று 150 புத்தகங்களுக்குமேல் எழுதக்கூடிய அறிவினைத் தந்தது என்றால், அவர்களை நான் வணங்கும் தெய்வமாக, வழிகாட்டும் அற்புமாக அல்லவா நினைத்து மகிழத் தோன்றுகிறது. வாழ்க அவர்கள் என்று இன்றும் வாழ்த்துகின்றேன். அந்த அவமானங்கள் தாம் என் தன்மானத்தை வளர்த்து, வாழ்வித்தது என்றால் உங்களுக்கும் இது பொருந்தும் அல்லவா!