பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. வாழ்வையே திசை திருப்பிய அவமானம்


ஒருவன் பேசும் சொல்லுக்கு மற்றொருவர் வாழ்க்கையையே மாற்றியமைக்கும் சக்தி உண்டு என்றால், அப்படிப்பட்ட ஒரு வாக்கியம் என் வாழ்க்கையில் உண்மையாயிற்று. அந்த அவமான உண்மையே நன்மையுமாயிற்று.

அந்த சொற்கள் என்னை ஏளனமாக நினைத்து சொல்லப்பட்டதா? கேவலப்படுத்த வேண்டும் என்று பேசப்பட்டதா? என்பதே இன்று வரை யோசித்துப்பார்க்கிறேன். விடை கிடைக்காமல் விழித்துக் கொண்டிருக்கிறேன்.

எனக்கு ஏற்பட்ட அன்றைய அவமானம்,சந்தர்ப்பத்தால் நேர்ந்ததா? தமாஷ் பண்ண வேண்டும் என்பதால் வந்ததா? எப்படி இருந்தாலும், அந்த நாளில் நான் அதை அவமானமாகத் தான் கருதினேன்.ஆவேசமாகத்தான் துள்ளினேன். அருகில் இருந்தவர்களைத் தள்ளினேன். கொதித்துக் குதித்துவிட்டேன்.

அந்த ஒரு நிகழ்ச்சிதான், இன்று விளையாட்டுத் துறைக்கு இலக்கியம் கிடைக்க வழி வகுத்தது. தமிழ் இலக்கியத்தில் ஒரு புதுத்துறை பூத்துக் குலுங்கும் புரட்சியையே உண்டு பண்ணிவிட்டது.

காரைக்குடி அழகப்பா உடற்கல்விக் கல்லூரியில் படிக்கும்போது ஏற்பட்ட அவமானம், என்னை விளையாட்டுக்களில் வேகமாகப் பயிற்சி பெற விரட்டி, வெற்றி கண்டது. உடல் திறமையை வளர்த்துக்கொள்ள, அந்த அவமானம் உதவியது.