பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

அவமானமா? அஞ்சாதே!


உடற்கல்வித் தேர்வில் முதல் வகுப்பில் Distinction பெற்று வெற்றி பெற்றதால், அழகப்பா கலைக்கல்லூரியில் உடற்கல்வி இயக்குநர் பதவியையும் பெற்றுத் தந்தது. திரு. குழந்தைநாதன் என்பவர், தமிழ்த் துறையில் விரிவுரையாளராக இருந்தார். அவர் எனக்கு நண்பரானார். என் தமிழ் அறிவில், தமிழ் படைப்புகளில் அவருக்கு ஆழ்ந்த திருப்தி அதனால் அவருடனே கல்லூரியில் அதிக நேரம் இருக்கின்ற சூழ்நிலையும் எனக்கு அமைந்தது.

தமிழ்த் துறையில் அப்போது பணியாற்றிய பிற விரிவுரையாளர்களுக்கும் குழந்தைநாதன் அவர்களுக்கும் பனிப்போருண்டு. வெயில் தெரிந்தும் தெரியாமலும் நீறுபூத்த நெருப்பான நிலைமை அங்கு நிறைய இருந்தது.

குழந்தைநாதன் கூட நான், அதிக நேரம் இருந்ததால் தமிழ்க் குழுவிற்கு என்மேல் ஓர் இனம்புரியாத கோபம். வெளியில் சிரித்துப் பேசினாலும், உள்ளுக்குள்ளே ஒர் உறுத்தான எரிச்சல்,

சந்தர்ப்பம் கிடைத்தது என்னை சாடுவதற்கு அவர்கள் அதற்காக காத்திருந்தார்களா என்பதை நான் எதிர்பார்க்கவேயில்லை.

கல்லூரி மலர் ஒன்று வெளியிடப் போவதாகவும், அதற்கு கதை கட்டுரை போன்றவைகளை கொண்டு வந்து தரலாம் என்றும் ஒர் அறிவிப்பு வந்தது.

அவ்வப்போது நாடகம், கவிதை, கதைகள் எழுதிக் கொண்டிருந்த நானும், கவிதை ஒன்றை எழுதிக் கொண்டு, எனது சீனியராக இருந்த திரு.டாட் அவர்களுடன், அந்தத் தமிழ்த்துறை தலைவர் அவர்களின் அறைக்குள் நுழைந்தேன்.

வரவேற்ற அவர், இருக்கை தந்தார். அமர்ந்தோம். கொடுத்த கவிதையை வாங்கினார். படித்தார். முகம் களித்தார். இமை விரித்தார். என்னை ஏறெடுத்துப் பார்த்தார். சிறிது நேரம் யோசித்தார். ஆச்சரியக் குரலில் பேசினார்.