பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

41



படிக்காத பாமரனுக்கு முடிகிற காரியம், படித்த என்னால் ஏன் முடியாது? பார்த்து விடுவோமே அதையும் என்று வெடித்து வெளி வந்த முக வேர்வையை, அவலமாகத் துடைத்து விட்டு வெளியே வந்தேன்.

அவமானப் படுவதற்கும் ஒர் அளவில்லையா?

சீக்கிரம் வேலையை செய்து கொடு என்றால், உனக்கென்ன யோக்கிதை இருக்கிறது என்று அவர் பேசிய பேச்சு எனக்குள் ஆத்திரமூட்டியது. தனியே வந்து தவித்தேன், துடித்தேன். வாய்க்கு வந்ததையெல்லாம் திட்டினேன்.

புத்தகத்தை பொது நூலகத்திற்கு சப்ளை செய்ய வேண்டும் என்ற அவசரத்துக்கு ஏற்பட்டதுதான் அந்த அவமானம்.

என்ன இழப்பு நேர்ந்தாலும் சரி. இனிமேல் எந்த பிரஸ்க்கும் போவதில்லை என்று சத்தியம் செய்து மனதை சமாதானப் படுத்தியபடி, ஒர் உறுதியுடன் புறப்பட்டேன்.

நேரே போய், ஒரு வீட்டுப் புரோக்கரைப் பார்த்தேன். அச்சாபீஸ் திறக்க ஒரு வீடு வேண்டும் என்றேன். வீடு எதுவும் இல்லை. ஒரே ஒரு ரூம் இருக்கிறது. போதுமா என்று பார்த்தால், இப்போதே முடித்துவிடலாம் என்றார்.

போனோம் பார்த்தோம் இடம் போதாது என்றாலும், சம்மதம். வீட்டுக்காரரைப் பார்த்தோம். கையில் இருந்த 200 ரு அட்வான்ஸ், புரேக்கருக்கு 100 ரூபாய்.

வீட்டுக்காரர் வீட்டில் இருந்த ஒரு அட்டையை எடுத்து கிரேஸ் பிரிண்டர்ஸ் என்று எழுதி, அந்த புது இடத்தின் வாசலில் கட்டுகிறபோது, இரவு 10 மணி.

வீட்டிற்கு வந்து, உட்கார்ந்த போதுதான் மனதுக்கு ஒரு ஆறுதல் வெறும் அறைக்கு முன்னே கிரேஸ் பிரிண்டர்ஸ் என்று எழுதி வைத்ததினால் ஏற்பட்ட வெற்றியா என்றால், அது வெற்றியின் ஆரம்பம். அவமானத்தை விரட்டி அடிக்க கொடுத்த முதல் உதையின் முனைப்பான முயற்சி அது.