பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



8. வீடு தந்த பாடு


ஒருவரது அறிவை அழித்துப் போடுவது பொறாமைதான். ஒருவரது முன்னேற்றத்தைத் தடுத்து மடக்குவதும் பொறாமைதான். ஒருவரது வாழ்வையே நாசமாக்கி விடுவதும், எப்போதும் ஒடிப்பதும், உடைப்பதும் பொறாமைதான்.

பொறாமை என்பது மனப்புழுக்கத்தை அதிகமாக்கி, மன அமைதியை முடமாக்கி, யோசிக்கும் நல்ல சிந்தனையையே தரைமட்டமாக்கியும் விடுவதால், பொறாமை கொண்டவர் வீழ்வதும், பொறாமையில் பாதிக்கப்பட்டவர்கள் சிறப்பாக வாழ்வதும் சகஜமாக ஆகிவிடுகிறது. சில சமயங்களில் சரித்திரமும் ஆகிவிடுகிறது.

என்னுடைய ஜாதகமும் இப்படிப்பட்டதாகவே இருக்கிறது என்றால், அது உண்மைதான். மிகையானதல்ல

என்மேல் பொறாமை கொண்டவர்களின் பேரன்புதான் என் வளர்ச்சிக்கும் காரணம்.

என்னை தூவெனத் துப்பித் துாற்றி, சீயென ஏசிப் பேசி: என் முயற்சிகளுக்கு முனை முறியும்படியான வதந்திகளைப் பரப்பி விட்டாலும் கூட, நான் அந்த வழுக்கலில் விழாமல், தடைகளில் இடறிவிழாமல், முன்னேறி வந்திருக்கிறேன் என்றால், பொறாமைக்காரர்களின் போர்க்குணமும், அதனால் ஏற்பட்ட அவமானமும்தான் அடிப்படைக் காரணம். நான் ஒருவருக்கு உதவி செய்யப் போனாலும், அவர் எனது உதவியைப் பெற்றுக் கொண்டு, அதற்குப் பரிசாக அநியாயமான குற்றச்சாட்டுகளைக் கூறுவார். அதுவே என்னை தன்மானமுள்ளவனாக மாற்றிவிடும்.

ஒரு புழுவைக் கொட்டிக் கொட்டிக் குளவியாக்கிவிடும் விஷயத்தை நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். அதுபோல்தான் என் வாழ்வும்.