பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

அவமானமா? அஞ்சாதே!



ஒன்று முடிந்தது என்று நான் ஒய்வெடுக்க ஆசைப்படுகிற போது, ஒரு அவமானம் ஏற்படும். அதை சரிகட்ட அந்த அவமானத்தைத் துடைத்துக் கொள்ள முயற்சிப்பதுதான், தொடர்ச்சியாக என் வாழ்க்கையின் வாடிக்கையாகிவிட்டது.

விளையாட்டு நூல்கள் 100 எழுதியாக வேண்டும். அதிகமான பட்டங்களை வாங்க வேண்டும். அச்சகம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும். விளையாட்டு பொருட்கள் விற்கும் கடை ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற என் எல்லா முயற்சிகளுக்கும், நான் காரணமல்ல. காரணமே அல்ல!

என்மேல் அன்பு கொண்ட பொறாமைக்காரர்களின் பேருதவிதான் காரணம். அவர்கள் அறிவு சான்ற உதவிக்கும் ஆக்கப் பூர்வமான அறிவுரைகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னால் முடியாது என்று முடிவெடுத்துவிட்ட காரியங்கள் எல்லாம், எனக்கு நேர்ந்த அவமானங்கள்தான் ஆர்ப்பரித்து எழவைத்தன என்பதற்கு இன்னும் ஒரு சூழ்நிலையைத் தான் இங்கே விளக்க இருக்கின்றேன். 1965-ம் ஆண்டிலிருந்து 1986-ம் ஆண்டு வரை வாடகை வீடுகளிலேயே வாழ்ந்தாகிவிட்டது.

நான் வாங்குகிற சம்பளத்தில், வீடு வாங்க முடியும்? அல்லது இடம் வாங்கி வீடு கட்டவா முடியும்? என்று யோசித்து நம்பிக்கை இழந்துவிட்ட நிலையில் ஒருநாள், என் வாடகை வீட்டு உரிமையாளர் என்னிடம் வந்தார். நீங்கள் உடனே வீட்டைக் காலி செய்தாக வேண்டும் என்றார். அவரது திடீர் அறிவிப்பு, என்னை திக்குமுக்காடச் செய்துவிட்டது.

காரணம் கேட்டேன். உண்மையைச் சொல்லவில்லை. பொய்யாக பல காரணங்களைக் கூறினார். நான் குடிவரப்போகிறேன் என்றார். அவர் ஏற்கனவே வசதியாக பெரிய வீட்டில்தான் வசிக்கிறார்.