பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

அவமானமா? அஞ்சாதே


இருக்கிறது. அந்தக் கடையை மையமாக வைத்து நூறு மீட்டர் தூரத்திற்குள்ளாக, ஒரு இடம் வாங்கி வீடுகட்டுவேன் என்று அல்லது ஒரு வீட்டை வாங்குவேன் என்று என் மனைவியிடம், சமயம் வாய்க்கும் பொழுதெல்லாம் என்னையும் மீறி உற்சாகத்துடன் சொல்லிச் கொண்டேயிருப்பேன். இது ஒரு 20 வருடப் பேச்சு. “இந்த மாதம் ரேஷன் வாங்குங்கள். பிறகு வீடு வாங்குவதைப் பார்த்துக் கொள்ளலாம்” என்பது என் மனைவியின் பதில் அன்றைய வாழ்க்கை நிலை அப்படி!

இப்படி கிண்டலுக்காக் கூறினாலும், வீட்டு நிலைமை அதுதான். மாதச் சம்பளக்காரனுக்கு வயிறும் குடும்பமும் முயல் வேகத்தில் பெருகும். சம்பளமோ ஆமை வேகத்தில் நகரும். மனைவியின் தமாஷ் பேச்சை, நான் சாதாரணமாக வெளிப்பார்வைக்கு எடுத்துக் கொண்டாலும், உள் மனதிலே விழுகிற சவுக்கடியாக ஏற்றுக் கொண்டு, வாங்குகிறேன் பார் என்று சவாலாகச் சொல்லிக் கொள்வேன். அதற்காக இரவு பகல் பாராது எழுதத் தொடங்கினேன். விளையாட்டுட் புத்கத்தை யார் அச்சிடுவார்? யார் புத்தகம் போடுவார்: விற்றுத் தருவார்?

ஆனாலும் நானே முயற்சித்தேன். அதாவது I have tried என்ற வாக்கியத்தை உளமாரப் பின்பற்றிக் கொண்டேன் விளையாட்டுத்துறை எழுத்தாளராக ஆனதுடன், அச்சகத்தாராகப் பதிப்பிக்க, விற்பனையாளராக, முழு நேரப் பணி செய்தேன். இதற்காக, TVS கம்பெனியில் பார்த்த நல்ல ஆபீசர் உத்தியோகத்தையும் ராஜினாமா செய்துவிட்டேன் நிலைமை கொஞ்சம் சரியானபோது, வீடு தேடும் படலம் தொடங்கியது.

ரெங்கநாதன் தெருவில் இருந்து 100 மீட்டருக்குள்ளாக ஒரு இடம் இருப்பது தெரிந்தது. காலி இடம். காண்பதற்கு கண்கோடி போதாது. அதாவது கழிவிடம் தோற்றுப் போவது போலக் காணப்பட்ட இடம்.