பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

57



தீபாவளி என்கிறார்கள். அதையே தீப வரிசை என்கிறார்கள். தீப விமோசனம் என்கிறார்கள்.

ஆலயத்தில் ஆண்டவன் திருமுகத்தைத் தெளிவுறக் காட்சி தந்திட தீபாரதனை காட்டுகின்றார்கள். அப்படி என்றால் தீபம் என்பதற்கு என்னதான் பொருள்? ஏன் அந்த மகத்துவம் அதற்கு?

தெய்வத்தின் சன்னதியில் வீற்றிருப்பதாலா?

பக்திகரமாக விளங்குவதற்குரிய சுற்றுப்புறச் சூழ்நிலையை பிரகடனப் படுத்திக் கொண்டிருப்பதாலா?

தீபம் என்ற சொல், எந்த மொழிச் சொல்லாக இருந்தாலும், அதன் மரியாதையே தனிதான்.

தீபம் என்றால் அது இராஜ சின்னத்தில் ஒன்று என்று சிறப்புற பேசுவார்கள்.

அதை நாம் இரண்டு சொற்களாகப் பிரித்துப் பார்ப்போமே! இன்னும் அதன் பெயரில் உள்ள தெளிவு தெரியும்.

தீ+பம்=என்றால் என்ன? நமக்கே தெரியாதே, புரியாத பொருட்கள் கொண்டதாக இருக்குமோ?

தீ என்றால் நெருப்பு என்பார். தீமை என்பார். கோபம் என்பார். விஷம் என்பார். கொடுமை என்பார்.

ஆனால், அறிவு என்று ஓர் அர்த்தம். இனிமை, எளிமை, தித்திப்பு, விளக்கு என்றும் அர்த்தம் உண்டு.

பம் என்றால், விண்மீன் என்று அர்த்தம்.

ஆக தீபம் என்றால் அறிவில் விண்மீன், இனிமைக்கு ஒரு விண்மீன் என்றும் ஒரு அர்த்தம் வருகிறதல்லவா?

இளைய நெஞ்சங்களே! இனிய வாலிபர்களே!

தீபமாய் இருங்கள் என்றால் புரிகிறதல்லவா?

துருவ நட்சத்திரம் இளமைக்கு எடுத்துக்காட்டு அல்லவா!