பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

65



பிரச்சனைகளின் பெரிய குன்று என்பார்கள். அப்படி அல்ல. வாழ்க்கையே பிரச்சனை என்பவர்களும் உண்டு.

சுற்றுப்புறச் சூழல்களில் தூசியும், அழுக்கும், பிசுக்கும், கசடும் நிறைந்து இருப்பது போல வாழ்க்கைக்குள்ளே கவனங்கள், கலக்கங்கள், குழப்பங்கள், குமுறல்கள், குமட்டல்கள் எல்லாமே இருக்கும். அதாவது குப்பையாகக் கிடக்கும்.

அந்தக் குப்பைகளுக்கு உள்ளேதான் குண்டுமணி போல, கற்கண்டுக் கருத்துகளும், பொன்வண்டு பூரிப்புகளும் கிடைக்கும். கோழிகள் எல்லாம் குப்பையைக் கிளறிக் கொண்டிருப்பது பொழுது போக்கிற்காக அல்ல.

தங்களுக்குத் தேவையான தீனிகளை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொண்டு, தேவையைத் தீர்த்துக் கொள்ளவே!

எத்தனைக் குப்பைகள் கிடந்தாலும், அதிலே தனக்குத் தேவையான இரையைத்தான் தேடும். குப்பைகள் ஏன் என்று கேட்பதுமில்லை. முறைப்பதும் இல்லை. அவற்றைக் கிளறுவதற்கு அஞ்சுவதுமில்லை.

குப்பை என்பது இயற்கை.

அதுபோலவே, நமது இளைஞர்களுக்கு எதிரானவை எல்லாம் குப்பைகளே, தடுமாறச் செய்யும் தடைகள், தகுந்த விளக்கமிளக்காத விடைகள் தேவைக்கு உதவாத முடைகள் எல்லாம் குப்பைகளே.

கோழிகள் குப்பைகளைக் கிளறித் தள்ளுவதுபோல, இளைஞர்கள் சிக்கல்களை ஆராய வேண்டும். சிக்கல்களை புறம் தள்ள வேண்டும்.

தனது முன்னேற்றத்திற்கு உதவுகிற கருத்துக்களை, ஞானத்தை மட்டும் தேடி தெளிவாகப் பெற வேண்டும். குப்பையைக் கோழி உண்ணாது. அதுபோலவே கெட்ட செயல்களான குப்பைகளை இளைஞர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது.