பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12. உப்பாக இருங்கள்,உம்மாக வாழுங்கள்


வாழ்க்கையில் வெற்றிபெற கொக்காக வாழ வேண்டும் கோழிபோல் வாழ வேண்டும் என்று கூறினோம்.

வலிமையான முயற்சிக்கும் வைராக்கியம் நிறைந்த உறுதிக்கும் கொக்கின் நிற்கும் நிலை ஒரு எடுத்துக்காட்டு.

கொக்கு தான் பிடிக்கின்ற மீனுக்கான உபாய முறை அதுபோலவே கோழியும்.

குப்பைகளைக் கிளறிக் கொண்டிருந்தாலும் கொண்டிருக்கும் இரைதேடும் முயற்சி குன்றாதது போலத்தான் நாம் நமது முயற்சிக்கு முனைப்புதர வேண்டும்.

இனி மூன்றாவது நான்காவது குறிப்பைப் பார்ப்போம்.

உப்பாக இருக்க வேண்டும்.

உம்ஆக இருக்க வேண்டும்.

உப்பின் தன்மை என்ன? நீரில் கரைந்து போவது நீருள் கரைந்தாலும் தன்னுடைய நிலையில் மாறிப் போகாமல் இருப்பது. சுவை கொடுப்பது. சுகம் அளிப்பதும் உப்பின் குணம்.

மனிதன் ஒரு காரியத்தில் இறங்கி கடமையாற்றுகிற போது, பணியாற்றுகிறபோது, அதனில் ஒன்றிப் போய்விட வேண்டும் என்பதுதான் இதில் உள்ள சிறப்புக் குறிப்பு.

'ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்' என்பது போல செயல்படாமல், ஏனோதானோ என்று நினைக்காமல் உள்ளம் ஒன்றிப்போக உடல் ஒருமித்து செயல்பட வேண்டும்.

உப்பின் குணம் இன்னும் ஒன்று இருக்கிறது.

உணவிலே உப்பின் அளவு குறைந்தால் சப்பென்றி போய்விடும் ருசி இருக்காது.