பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

67



அதுபோலவே உணவில் உப்பின் அளவு மிகுதியாகப் போய் விட்டால் உணவின் ருசி பாழாகிவிடும்.

ஆகவே, அளவான உப்பின் அளவு அமிர்தமான ருசியைப் படைக்கும் என்பது, அனைவரும் பெற்ற அனுபவம்தான். அதனால்தான் உப்புக்கு இனிமை என்று ஒரு பொருள் உண்டு.

நீங்கள் எப்போதும் உப்பாக, அதாவது இனிமையானவராக இருக்க வேண்டும்.

இங்கே இனிமை என்றால், சர்க்கரையைத் தடவிக் கொண்டு நிற்பதா என்று கேலி கூடப் பேசலாம்.

அதாவது நடுநிலையாளராக நிற்க வேண்டும். இன்பம் என்றதும் 'ஓகோ' என்று தன்னை மறந்து குதிப்பதும், பறப்பதும்; துன்பம் என்றதும் 'ஐயோ' என்று அலறுவதும் அழுவதும்; இரண்டுமே முன்னேற்றம் பெற விரும்புவோருக்கு அழகல்ல.

அது எப்படிப்பட்ட நடுநிலை என்று கேட்கலாம்.

கிராமத்து இளைஞர்கள் பெரியவர்கள், சிறுவர்கள் எல்லாம் காலை நேரத்தில் தீ மூட்டிவிட்டு குளிர்காய்வார்கள். தங்களை வெப்பப்படுத்திக் கொள்ள.

தீக்கு அருகில் போனால் சுட்டு விடும் தீயை விட்டுத் தள்ளி இருந்தால் குளிரும்.

சுட்டும் விடாமல், குளிரும் இல்லாமல், ஓரிடமாக, பொருத்தமான இடம் பார்த்து அமர்ந்து குளிர் காய்ந்து மகிழ்வார்கள். அதுதான் நடுநிலை.

அகலாது அணுகாது தீக் காய்வார்கள் போல என்று வள்ளுவர் இதை மிக அழகாகக் குறிப்பிடுவார்.

உப்பு குறைந்தாலும், மிகுந்தாலும் உதவாததுபோல, உங்கள் நினைப்பும் உழைப்பும் சீராக சிறப்பாக அமைய வேண்டும்.