பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

69



இன்னொரு 'ம்' இருக்கிறதே!

அது வார்த்தையின் கடைசியில்தான் வரும்.மொழிக்கு முதலில் வராது. வரவும் வராது. கூடாது.

சொல்லின் இறுதியிலே வருகிறபோது, அதற்கு ஒரு அர்த்தம் உண்டு.

பயனில்லாத இறுதியிலே வருகிறபோது, அதற்கு ஓர் அர்த்தம் உண்டு.

அந்த 'ம்' மைப்போல நீங்கள் இருக்க வேண்டும். எந்த இடத்திற்குப் போனாலும் அங்கே கடைசி ஆளாக அமர்ந்து கொண்டு நடப்பதை பார்த்துக் கொண்டிருங்கள்.

நீங்கள் வேண்டுமென்றால் கட்டாயம் உங்களை வந்து அழைப்பார்கள். மதிப்பார்கள், மரியாதை செய்வார்கள். மேடையில் அமர்த்துவார்கள். மேன்மை பலவும் தருவார்கள்.

நீங்களாகப் போய் முன்னே நிற்கிறபோது உங்களின் வருகை அங்கே சிலருக்குத் தேவையில்லாமல் இருக்கலாம் பலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களை ஒரு தொல்லையாகக் கூடக் கருதலாம். அப்படி ஒரு சூழ்நிலை எழும்போது, உங்களைத் தவிர்த்துவிட முயற்சிப்பார்கள். அகற்றிவிட முனைவார்கள். அவமானகரமான சந்தர்ப்பம் கூட அங்கே உண்டாகலாம்.

அதனால்தான் 'ம்' போல இருங்கள். கடைசியாக இருங்கள். ஆனால் காரியம் கை கூடும் வண்ணம் நீங்கள் இருக்கிறபோது, உங்களுக்கு அழைப்பு வரும் அப்படிப்பட்ட உயர்நிலையை நீங்கள் உருவாக்கிக் கொள்ள உழைக்க வேண்டும். உயர்ந்திட வேண்டும்.

தன்னைத்தான் தாழ்த்திக் கொள்கிறவன் உயர்த்தப் படுவான். தன்னைத்தான் உயர்த்திக் கொள்கிறவன் தாழ்த்தப்படுவான்.

தன்னைத்தான் தாழ்த்திக் கொள்ளுதல் என்றால் அது தாழ்வு மனப்பான்மையைத் தான் உண்டாக்கும்?

இங்கே நாம் சொல்ல வருவது மனப்பான்மையை அல்ல. மனத் திண்மையை.

நமது திறமையை, பெருமையை அறிவுக் கூர்மையை வெளிப்படுத்த விரும்புவதும் முயற்சிப்பதும் தவறானதல்ல.