பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

85



இப்படி பல வடிவங்களில் உங்களை வழி நடத்துகிற தேடல்தான், தலையான அம்சம் என்பதை நீங்கள் நெஞ்சிலே, கொஞ்சமும் அச்சமின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

என் பிறப்பு இப்படி இருக்கிறதே? என் குடும்பத்தில் வறுமை கூத்தாடுகிறதே? கூடியிருப்பவர்களின் கோபம் கொப்பளிக்கிறதே என்று நீங்கள் கூறலாம். உண்மைதான்.

கடல் என்றால் அலைகள் வந்து கொண்டேதான் இருக்கும். அதற்காகப் பயணிக்காமல் இருக்க முடியுமா?

உடல் என்றால் நோய்கள் பிறந்துகொண்டேதான் இருக்கும். அதற்காக வாழ்வையே வெறுத்துத் தள்ளிவிட முடியுமா?

வாழ்க்கையில் வெற்றிகரமாக வாழ, விரும்பியதை சாதிக்க வேண்டியதை அடையும் ஒரு ரகசியத்தை இங்கே உங்களுக்குச் சொல்லித் தருகிறேன்.

அந்த சூட்சமம் மிக எளிது. ஆனால், பின்பற்றிக் கொள்ள மலைபோல உறுதியான மனமும், மலர்போல அசைந்து கொடுக்கும் தெளிவும் சுளிவான உடலமைப்பும் வேண்டும். இதோ!

ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு ஆறு ஓடுவதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

சலசலவென்று கம்பீரமாக ஓடிக்கொண்டிருக்கிற அந்தச் சிற்றாறு, தங்கு தடையில்லாமல் எங்கும் பசுமையை படைப்பித்துக் கொண்டு பயணம் போய்க் கொண்டிருக்கிறது.

ஓடுகிற பாதையில் ஒரு மேடு உருவாகியிருக்கிறது. ஆறு என்ன செய்யும்? ஓட்டத்தை நிறுத்திவிடுமா? கலங்கிப் போய் குளமாகி குட்டையாகித் தேங்கிவிடுமா?

இல்லையே! அது பயணததை நிறுத்தாமல், பத்திரமாகப் போய்க் கொண்டிருக்கிறது. எப்படித் தெரியுமா? அதுதான் ஆற்றின் அறிவான வியூகம்.

எதிரே ஏற்பட்டுவிட்ட அந்த மேட்டைப் பார்க்கிறது. தன்னால் கடந்து போக முடியும் என்றால், மேட்டின் மேல் ஏறிக் கடந்துவிடுகிறது.