பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

91



தேர்ந்த ஞானம் என்பது எப்பொழுது தென்படும்? அதற்காக நாம் நமது வாழ்க்கையை நான்கு பகுதியாகப் பிரித்துப் பார்க்கலாம். ஒன்று வேகம். இரண்டு விவேகம், மூன்று யோகம். நான்கு வியோகம்.

வேகம் என்பது இளமையின் எழுச்சி நிலை ஆகும். எப்பொழுதும் துறுதுறு என்று சுறுசுறுப்புடன் சுற்றுலா வரும் காலம் அருவியாக ஆர்ப்பரித்து குதிக்கின்ற எண்ணங்களின் வேகம் காடடாறாய் கரைகளை உடைத்து கவலை இல்லாமல் கதைகள் பண்ணிக் கொண்டு இருக்கிற காலம்.

கற்பனைகளின் வேகம் மேடு பள்ளம் பாராமல் ஏற்றம் இறக்கம் பாராமல் மானம் அவமானம் பாராமல் மனதில் பட்டதை செயலில் செய்து பார்க்க வேண்டும் என்று சிலர்ப்பின் வேகம் எதிலும் வேகம். இந்த இளமைக் காலத்தின் எடுப்பான வேகத்தில்தான் எல்லா இளைஞர்களும் எரிந்து கொண்டிருக்கிறார்கள்.

வெறும் வேகம் மட்டும் வெற்றிக்குப் பரிகாரம் ஆகாது. வேகத்திற்குக் கொஞ்சம் அறிவு வேண்டும். அறிவான வேகத்திற்குப் பெயர்தான் விவேகம். வி என்றால் அறிவு என்று அர்த்தம் அறிவின் நாயகத்திற்குப் பெயர்தான் விநாயகர் அறிவுக்கான வினாக்களை எழுப்புகின்ற அகம்தான் விநாயகம்.

வெற்றிகரமாக ஒரு வேலையை செய்ய வேண்டும் என்றால் வேகத்துடன் கூடிய விவேகம் வேண்டும். வேகமும் விவேகமும் உங்களுக்கு நிறைய வேண்டும் என்றால் மூன்றாவது நிலையான யோகம் வேண்டும். யோகம் என்றால் உடலையும் மனத்தையும் ஒருமுகப்படுத்தி ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாகும்.

இப்பொழுது நாம் ஒரு முடிவுக்கு வருவோம். வேகம், விவேகம், யோகம் இந்த மூன்றும் உங்களிடம்தான் இருக்கிறது என்பதை முதலில் உணரவேண்டும். எங்களிடம் இது இல்லை என்று நீங்கள் சொன்னால் அது உண்மைக்குப் புறம்பான ஒரு ஏமாற்றும் பொய் ஆகும்.