பக்கம்:அவள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82 லா. ச. ராமாமிருதம்

“அனு”

ஓடிவந்தாள், தழையத் தழையப் பசு.

“ஏமாந்துவிட்டோம்!”

“இல்லை, இல்லை, மாட்டேன், மாட்டேன்—”

எரிமலை வெடித்தது. உன் கால்களை அணைத்தபடி உன்மேல் விழுந்து அவள் வீறிடுகையில், மார்த்துணி நழுவி, தலையவிழ்ந்து மயிர் புரண்டு, உடலின் பரவாட்டல் பார்க்க சஹிக்கவில்லை.

“முடியாது, முடியாது. மாட்டேன், மாட்டேன்.”

எனக்குச் சற்று கோபம்கூட வந்தது. என்ன முடியாது. என்ன மாட்டேன்?

“அனு,, We must face facts.”

“Facts”? காளி என்மேல் திரும்பினாள். 'என்ன factsஐக் கண்டுவிட்டாய்?

“அனு, Look!”

பாஸ்கர், உன் கண்கள் திறந்து, நீ எங்களை அடையாளத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாய். உன் உள்ளங்காலைத் தொட்டேன். சூடு திரும்பிக்கொண்டிருந்தது. நாடி அசைந்தது. மிக்க பலஹீனமாய், ஆனால் நிச்சயமாக பாஸ்கர், நீ விழித்துக்கொண்டிருக்கிறாய் என்றால், நான் விழித்துக்கொண்டிருக்கிறேனா?

விளக்கில் சுடர் ‘சொட சொட.’ என்ன பேசுகிறது?

“டாண் டாண்!” சுவர்க் கடியாரம் ஜயப்ரகடனம் செய்தது.

பாஸ்கர், உன் கண்கள் மூடிக்கொண்டன, நித்திரையில்.

“திவாகர் ஜன்னல் கதவுகளைத் திறவுங்கள்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/126&oldid=1496944" இலிருந்து மீள்விக்கப்பட்டது