பக்கம்:அவள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128 லா. ச. ராமாமிருதம்



குரல்கள் எட்ட எட்டப் போய்த் தூரத்தில் அமுங்கிப் போயின.


குழந்தை தன்மேல் போட்டிருந்த கந்தலை, முஷ்டித்த கைகளாலும் கால்களாலும் உதைத்துக் கொண்டு அழுதது. உடலின் பசியும் குளிரும் புரியவில்லை யாயினும், பொறுக்க முடியவில்லை.

அத்துடன் இந்தத் தனிமை-இதுவரை அவளுக்குப் பழக்கப்பட்டது. அரூபமாய், எவற்றிலும் நிறைந்த, உள் த்தின் ஒப்பற்ற ஒரு தன்மையின் தனிமை. ஆனால் இதுவோ, ஒர் உருவுள் கட்டுப்பட்டுவிட்டதால் அதற்கே தனியாயுள்ள தன் தனிமை.

கோபுர ஸ்தூபியின் பின்னிருந்து வெள்ளி, தேவியை அஞ்சலி செய்துகொண்டே கிளம்பியது. காளியாய்க் கத்திக் கத்தி, குழந்தைக்குத் தொண்டை கம்மிவிட்டது. புறப்பட்டுக்கொண்டிருக்கும் சூரியனுடைய கிரணங்களில் கோபுரத்தின் பித்தளை ஸ்தூபி பொன்னாய் மின்னியது.

அப்போது வயதான ஒரு பிராமணர், குளிப்பதற்காகப் படிக்கட்டுகளில் வெகு ஜதக்கிரதையாய் இறங்கினார். 'வீல் வீல்' என்று இருமுறை அலறி, குழந்தை அவர் கவனத்தை இழுத்தது.

'ஐயோ பாவமே யார் இப்படிப் பண்ணினது?"

குழந்தையை அவர் வாரி எடுத்துக்கொண்டார். அதன் தாய் ஒருவேளை குளத்தில் மிதக்கிறாளா அல்லது வேறு எங்கேனும் போயிருக்கிறாளா என்று சுற்றுமுற்றும் தேடிப் பார்த்துவிட்டு, வேறு வழி இல்லாமல் வந்த காரியத்தையும் மறந்துவிட்டு, அதை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போனார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/172&oldid=1497031" இலிருந்து மீள்விக்கப்பட்டது