பக்கம்:அவள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142 லா. ச. ராமாமிருதம்



காளி மகமாயி காளி மகமாயி
காலதனில் உள்ள முத்தை பாதத்தனில் இறக்கம்மா
பாரி மகமாயி பாரி மகமாயி
பாதந்தனில் உள்ள முத்தை நிலத்தினிலே இறக்கம்மா
நித்ய மகமாயி நித்ய மகமாயி'

ஏதோ பிடியினின்று விடுபட்டதுபோல், குழந்தைக்கு உடல் உதறியது. எல்லோரும் போய்விட்டதென்று நினைத்துக்கொண்டு 'குய்யோ முறையோ’ என்று அடித்துக்கொண்டு ஓடிவந்து பார்த்தார்கள். அவன் தூங்கிக்கொண்டிருந்தான். முகத்தில் ஒரு புது நிம்மதி. தேகம் வியர்த்து ஜூரம் விட்டிருந்தது.

ஐயர் அப்படியே அதிசயித்து நின்றார்.

ஒரு வாரம் கழித்துக் குழந்தைக்கு ஜலம் விட்டார்கள், குழந்தையை மார்போடு அனைத்துக்கொண்டு ஜனனி விக்கி விக்கி அழுதாள். ஏனென்று அவளுக்கே புரியவில்லை. தாய்க்கும் விஷம் கக்காமலிருக்க முடியவில்லை.

'இதென்னடியம்மா கூத்து கொழந்தை சாகல்லையேன்னு அழறையா? ஜனணிக்குப் பூஜையறையில் யாரோ சிரித்தாற் போலிருந்தது. ஒடிப்போய்ப் பார்த்தாள். ஆனால் அங்கே யாரையும் காணவில்லை.

***

னனி மதமதவென வளர்ந்தாள். சீக்கிரமே பக்குவம் அடைந்துவிட்டாள். கறுப்புத்தான். கட்டு உடல். கட்டு மயிர். உறுப்புக்களில் நல்ல முறுக்கு. அதே மாதிரி கோபமும் முறுக்குத்தான்; ஒருவருக்கும் அடங்க மாட்டாள். சட்டுச் சட்டென்று கோபம் வரும்; வந்த சுருக்கில் தணிந்துவிடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/186&oldid=1496974" இலிருந்து மீள்விக்கப்பட்டது