பக்கம்:அவள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாக்ஷாயணி 183

தெரிந்தது. உன் கண்களில் ஜூரம் அடித்துக்கொண்டிருந்தது. ஒடிவந்து அப்படியே என்மேல் விழுந்தாய். சாட்டை மாதிரி உன் பின்னல், பாம்புபோல் என் கழுத்தைச் சுற்றிக்கொண்டது.'

அவன் உடல் கிடுகிடென ஆடிற்று. அவள் எழுந்து அவன் தோள்களைப் பற்றிக்கொண்டாள்.

'சில விஷயங்கள் சில சமயம் நேர்ந்து விடுகின்றன. அவை நேரும் முறையிலேயே அவைகளுக்கு முன்னும் பின்னும் இல்லை. அவை நேர்ந்ததுதான் உண்டு. அவை நேர்ந்தவிதமல்லாது வேறு எவ்விதமாயும் அவை நேரவும் முடியாது. நேர்வது அல்லாமலும் முடியாது. நேர்ந்த சமயத்தில் நேர்ந்தபடி அவை நேர்வது அல்லாது முடியாது. நேர்ந்தமையால், அதனாலே நேர வேண்டியவையாவும் ஆகிவிடுகின்றன. அப்படி நேர வேண்டியவையாய் ஆனதால் அவை நேர்ந்ததால் அவைகளில் ஒரு நேர்மையும் உண்டு. அந்த நேர்மை தவிர அவை நேர்ந்ததற்கு வேறு ஆதாரம் இல்லை. வேண்டவும் வேண்டாம். அவைகளின் ஸ்வரங்களே அவ்வளவுதான்.'

'நீங்கள் ஆச்சரியமான நிமிஷங்கள் படைத்தவர்.

இருவரும் வெகு நேரம் அவரவர் சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர். தம்பூரின்மேல் பதிந்த அவன் நாட்டம் மாறவில்லை.

'சரி, நேரமாகிவிட்டது, எழுந்திருங்கள்.'

"ஆகட்டும்."

இப்போது மணி என்னவோ? கண்ணை ஒரு முறை கொட்டியாவது திறக்க வேண்டாமா?”

'கண்ணை மூடினால் மாத்திரம் நேரமாகவில்லையா? விழித்துக்கொண்டிருந்தாலும் நேரந்தான். துரங்கினாலும் நேரந்தான். ஆகிற நேரம் ஆகிக்கொண்டுதான் இருக்கிறது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/227&oldid=1496922" இலிருந்து மீள்விக்கப்பட்டது