பக்கம்:அவள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196 லா. ச. ராமாமிருதம்



யெதிரில் கைகூப்பியபடி நின்றிருந்தாள். அவர் வந்தது தெரியவில்லை. அவருக்குக் கொஞ்சம் நெஞ்சைப் பிராண்டிற்று. ஆச்சர்யமா, பொறாமையா?

அவள் கண்ணைத் திறந்ததும்: "தியானம் மும்முரம் போல இருக்கு. அப்படி என்ன வேண்டுதலையோ?”

நகை பூத்தாள்: எல்லாத்தையும் சொல்லிட முடியுமா? நாங்கள் பொம்மனாட்டிகள். எங்களுக்குள் எத்தனையோ ரகஸ்யமிருக்கும். சரி, சாப்பிட வரேளா? சமையல் எளிசானாலும் எப்படியோ அதேநேரம் ஆயிடறது.'

உச்சி வெய்யில் நகநகத்தது. ரேழித் திண்ணையில் அமலி, தலைக்குயரக் கட்டையை வைத்துக்கொண்டு கண் அயர்ந்துவிட்டாள். கடைவாயில் வெற்றிலைச் சாறு வழிந்தது. இன்னமும் குறட்டையாக மாறவில்லைபெரிய மூச்சில் வயிறு மிதந்தது. காற்று சுகமாக வீசியது.

ஆனால் அவருக்குத் தூக்கம் வரவில்லை. ரேழித் திண்ணையில் மாறி மாறிப் புரண்டார். மூட்டுக்கு மூட்டு வலி. மனம் நிலைபடாமல் சஞ்சலித்தது.

சத்தமே ஆகல்லே. காரணம் வயசா, உடம்பா, மனசா? தின ஒழுக்கத்தில் சற்றுப் பிசகினால்கூட முதல் கோணல் முற்றிலும் கோணல். நிதானமே போச்சு. இவன்கள் வந்து கூத்தடிக்கல்லேன்னு யார் அழுதா? நாங்கள் கிழங்கள். எங்களை எங்கள் நிம்மதியில் இருப்பது இவர்களுக்கு ஆகல்லியே! இவாள் பிரியமாயிருந்தாலும் இருக்கலாம். இவாள் மாதிரி பிரியத்தை வேண்டப்பட்டவாளும் இருப்பா. ஏன் இவளே இருக்காளே, ஆனால் எனக்கு வேண்டாம்.

"அம்மா, இன்னும் உக்காரேதேங்கோ, பெருக்கிடறேன்." உட்கார்ர இடத்தைப் பெருக்கிட்டால் ஆயிடுத்தா? கூடம் முழுக்கக் குப்பை என்ன ஆறது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/240&oldid=1496474" இலிருந்து மீள்விக்கப்பட்டது