பக்கம்:அவள்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200 லா. ச. ராமாமிருதம்



சாவுன்னா சாப்பிடவே முடியாது. அப்படி நம்மை த்ராட்டில் விட்டுவிட மாட்டான்கள். அவாளுக்கும் ஊர்ப் பழின்னு ஒரு பயமிருக்குமே!'

"அது சரி அங்கே மூணு மாசம், இங்கே மூணு மாசம் அடுத்து மூணு மாசம்னு பெத்தவாளை ஏலம் விட்டால், உனக்கு வேண்டியிருக்கும்போல இருக்கு. என்ன சிரிக்கறே? கோபம் வந்துவிட்டது.

"நீங்க சொல்றதுக்குச் சிரிப்பு வந்தது. சரி, நீங்கள் சொல்றபடியே வெச்சுப்போம். நாமும் எப்பத்தான் ஊர் ஊராப் போயிருக்கோம்? இப்படியும் ஒரு மாறுதல்னா இருக்கட்டுமே!’

தலையிலடித்துக் கொண்டார். 'நீ மாறவே மாட்டாய். நீ காமாலைக் கண்ணிதானே!’ திடீரென ஒர் எண்ணம் உதித்தவராய், அமலி, ஏன், இப்படியும் தோணறது. நான் அப்பாவை மூணு மாசம், நீ அம்மாவை ஆறு மாசம், இந்த மாதிரியும் பங்கு போட்டுக் கொள்ளலாமில்லியா?”

அவளுக்கு ஒரு மூச்சு தவறுவது இருட்டில் கேட்டது.

"என்னன்னா சொல்றேள்? தம்மைப் பிரிச்சுடுவாளா?” திடீரென்று குரல் தீனமாகிவிட்டது.

"ஏன் நடக்கக்கூடாது? எல்லா சாத்தியக்கூறையும் யோசிக்க வேண்டியதுதானே. ஒரே சமயத்தில் இரண்டு பேர்னா அதுவும் பளுதானே? காலமும் அப்படித்தானே இருக்கு: சரி விடு-யோசனை பண்ணிப் பண்ணி மண்டை யைக் குடையறது. நீ சொல்றமாதிரி எல்லாம் முடிஞ்ச வரைக்கும்தான். அப்புறம் அவள் விட்ட வழி.”

கால் தூக்கம் அரைத் தூக்க மயக்கத்தில் யாரோ தன் கையைப் பிடித்தமாதிரி-அவள்தான். அவர் விடுவித்துக் கொள்ளவில்லை. அந்த மெளனச் சைகை வேண்டியிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/244&oldid=1497145" இலிருந்து மீள்விக்கப்பட்டது