பக்கம்:அவள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



xxviii



 

அப்போது என் முறை வருகையில் 'நீ என்னசெய்தாய்" என்று அவர் கேட்கையில், சொல்வேன்; சொல்ல முடியும், 'இதோ என் எழுத்தின் மூலம் உங்களுடைய நாம ரூபத்துக்கு, ருபநாமமாக என் வாணாள் முழுவதும் உங்களுக்கு என் அர்ச்சனை. அவர் என்னை துக்கி மடியில் வைத்துக் கொள்வார். இப்படி நினைப்பதில் ஒரு தென்பு, நிறைவு. என்னிடம் ஒப்படைக்கப்பட்ட எழுத்தை ஒழுங்காக, அவர் பெயரில் பயன்படுத்தியிருக்கிறேன் எனும் உணர்வே போதும். இதுவே என் விதிப்பயனைக் கண்டதுதான்.

ஆனால் இப்படி நினைப்பதில்கூட ஏதேனும் அர்த்தமிருக்திறதோ?

பாதிமா நோக்கில் 'அவர்.'

என் பாஷையில் 'அவள்.'

எனக்கொரு ஆசை. அதை வெளியிட இங்கேதான் சமயம் என் இறுதி வேளை நெருங்கிக்கொண்டிருக்கும் சமயத்தில் இதுவே என் பெரிய ஆர்வம். கடைசிவரை எழுத்தில் ஈடுபட்டிருந்தேன் என்கிற image உடன் உயிர் நீத்தல் வேண்டும். ஆனால் அது என் இஷ்டத்தில் இல்லையே. அந்தக் காலத் தருமப்படி சுத்த வீரன் படுக்கையில் சாகலாகாது. மரணம் வாழ்க்கையின் மான பங்கம் என்று எனக்கு ஒரு கருத்து உண்டு. நீண்ட நோய்வாய்ப்பட்டு, வாணாள் முழுவதுமாகச் சேமித்த கெளரவமும் பெருமையும் கரைந்து போவதை எப்படி விரும்ப முடியும்? உண்மையில் மரணத்துக்குப் பயப்படுகிறோமா, வாழ்வுக்குப் பயப்படுகிறோமா? குழப்பமாயிருக்கிறது. இதென்ன இயற்கையின் நியதியுடன் சண்டை போடுவது என்ன முட்டாள்தனம்! எனக்குத் தோன்றவில்லையா? ஆனால் மனம் எண்ணாமல் இல்லையே! எல்லாம் அவளுக்குத் தெரியும். அவள் என்ன சத்தியம் மறந்தவளா? அவளுக்கே விட்டுவிடுகிறேன். விட்டுவிடாமல் வேறு என்ன செய்ய முடியும்?

***

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/28&oldid=1496091" இலிருந்து மீள்விக்கப்பட்டது