பக்கம்:அவள்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தாய்

தாயின் மஹிமையை எத்தனைதான் பாடினாலும் பாஷை பற்றாது, வேதங்களே தவித்துக் கொண்டிருக்கின்றன. தெய்வம் உண்டா இல்லையா என்கிற சர்ச்சையும் சந்தேகங்களும் இன்னமும் பண்டித ரீதியில் ஆயிரம்வாத எதிர்வாதங்களுக்கிடையில் ஓய்ந்தபாடில்லை. ஆனால், தாயின் நிரந்தரம் பற்றி (உதவாக்கரை மகன் உள்பட) சந்தேகிப்பார் யாரும் இருக்க முடியாது.

தாயின் பெருமையை அறிந்துகொள்ள, பண்டிதமோ, பாண்டித்யமோ, பாடமோ வேண்டுமா? தும்பை அவிழ்த்துவிட்ட உடனேயே-துள்ளி ஓடிவந்து கன்று தன் தாயின் மடியில் முட்டும் மூர்க்கத்தில், உடனே தாய், கன்றை நக்கிக் கொடுக்கும் பரிவில், உடனேயே சுரந்து விட்ட பாலில், பேசாத பாஷைகள் எல்லாம் அலறி விடுகின்றனவே!

'அம்மே! அம்மே!! அம்மே!!!"

அம்மா எனும் சொல்லில் ப்ரணவாக்ஷுரங்கள் அடங்கியிருக்கின்றன. ஸ்வரஸ்தானத்தில் மேல் 'மா' அம்மாவில் பேசுகிறது. விளம்பகால விஸ்தாரத்தில் 'ம்' எனும் மூச்சு ஒடுக்கத்தில் அவரோஹன விஸ்தரிப்பு பெரிது. 'அ' நேரே நாபி, மூலாதாரம் பூர்வ ஜன்மாக்களையும் பிணைக்கும் தொப்புள் கொடி நரம்பு அதிர்வு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/315&oldid=1497881" இலிருந்து மீள்விக்கப்பட்டது