பக்கம்:அவள்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280 லா. ச. ராமாமிருதம்

படிக்கவா? அதற்கெல்லாம் அப்போது நான் குருடு. ஏனெனில் நெஞ்சு வர்ணம் பூரா ஸுனோ—ஸனிதா ஃபார் யு—வியாபித்திருந்தாள்.

சோபாவில் நான் உட்கார்ந்தேன்.

கிச்சனிலிருந்து நீ வெளிவருகையில் உன் இரு கைகளிலும் நீ ஏந்திய இரண்டு பீங்கான் கோப்பையை சாசர்களில் கம்மென்று ஆவி பறந்தது. என் கோப்பையை நான் எடுத்துக் கொள்கையில், சூடோ, இசைகேடோ கோப்பை தவறி தரையில் கீழே விழுந்து உடைந்த சுக்கல்களை பித்துக்கொள்ளி மாதிரி நான் பொறுக்க முயன்றபோது எப்படியோ என் கட்டைவிரல் ரேகையில் சிவப்பு புஷ்பித்து இதழ்கள் விரிந்தன. சட்டென உன் கைக் குட்டையைக் கிழித்து தரையில் மண்டியிட்டு நீ கட்டை விரலில்மேல் துணியைச் சுற்றிக் கொண்டிருந்தபோது—

அமலி காதல் பிறக்க நேரம், இடம், காரணம் என்றே கிடையாதா? என் பார்வைக்கு நேராக உன் முகம்கூட இல்லை. அது காயத்தின்மீது குனிந்திருந்தது. விர்ரென்று நடுவகிடு தன் பாதையை வகுத்துக்கொண்டு உச்சி மண்டையின் அடரில் மறைந்த அழகில் நான் என்னை, இழந்தேன். நீ என்ன தைலம் உபயோகிக்கிறாய் அமலி? காமினி ஹேர் ஆயிலா? அதன் மயக்கா? இல்லை இல்லை. உன் இளமையின் மணம். இல்லை அது கூட இல்லை. உன் மணமே! அமலி முதலில் காதல் என்பதே என்ன? இந்த வார்த்தை இதிகாச காலத்தினின்று இன்று வரை காவியங்களிலும் கதைகளிலும், கவிதைகளிலும், வசனத்திலும், வாய் வார்த்தையிலும் வாங்கியிருக்கும் அடியும் பட்டிருக்கும் எச்சிலும் கொஞ்ச நஞ்சமல்ல. ஆயினும் அதற்கு இன்னும் ஏன் விவஸ்தை இல்லை?

"மிஸ்டர். இந்தக் கட்டிலை நான் உங்களுக்கு விற்கப் போவதில்லை.”

"ஏன்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/324&oldid=1497735" இலிருந்து மீள்விக்கப்பட்டது