உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அவள்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபூர்வ ராகம் 313

அவளுக்கு எவ்வளவு மறு உலகத்தில் நம்பிக்கையோ அத்தனைக்கத்தனை என் மனம் இங்குதான் ஊன்றி நின்றது. எதற்குச் சொல்ல வந்தேன் என்றால், எப்படியோ அம்மா இருக்கும் வரை, அவளுக்கடங்கி சமர்த்துப் பிள்ளையாய் இருந்துவிட்டு, அவள் கடன் கழிந்ததும், உதறித் தோளில் போட்டுக்கொண்டு, ஊரை விட்டுக் கிளம்பிவிடக் காத்திருந்தேன்.

ஆயினும் அம்மா என்னைச் சும்மா விடும் வழியாயில்லை. ஜாதகங்களைப் போட்டுப் புரட்டிக்கொண்டு இருந்தாள்.

ஆரம்பத்தில் ஜயம் என்பக்கம்தான் இருந்தது. லேசில் ஜாதகம் ஒத்துக்கொள்ளவில்லை. (நம் ஜாதகம்தான் அலாதி ஜாதகமாயிருக்கிறதே!) அப்படியே ஒன்றிரண்டு பெண் பார்க்கப் போனவிடத்தில் குற்றங்குறை சொல்லித் தப்பித்துக்கொண்டேன். அம்மாவுக்கும் அலுத்துவிட்டது.

அப்புறம் ஒரு ஜாதகம் வந்தது. பொருத்தம் ஏதோ சுமார்தானாம். அம்மாவுக்கு அவ்வளவு திருப்தியில்லை. பெண் அமாவாசையில் ஜனனம். "பெண் பார்க்கப் போவோமா?" என்றாள். என் பதில்தான் எப்பொழுதும் என்னிடம் தயாராய் இருக்கிறதே 'பிடிக்கவில்லை' என்று. ஆகையால் பெண் பார்க்கப் போனோம்.

நீலம் உடுத்தி, இரை தின்ற பாம்புபோல் கனத்துப் பின்னல் முழங்காலுக்கும் கீழ் தொங்க, நிமிர்ந்த தலை குனியாது, சமயலறையினின்று வெளிப்பட்டு வந்து நமஸ்கரித்து மையிட்ட கண்களை ஒரு முறை மலர விழித்து, புன்னகை புரிந்து நின்றாள்; அவ்வளவுதான்.

அவள் தான் நான் கண்ட அபூர்வராகம்,

சில விஷயங்கள் நடந்துவிடுகின்றன. கால காரணங்களற்று அவை நேர்ந்ததற்கு நேர்ந்ததுதான் சாக்ஷி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/357&oldid=1497916" இலிருந்து மீள்விக்கப்பட்டது