பக்கம்:அவள்.pdf/373

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அபூர்வ ராகம் 329 இத்தனைக்கும் மூலகாரணிபோல் அவள் நிமிர்ந்து நின்றாள். அவள் ஆடை உடலிலிருந்து பிய்ந்துவிடும் போல் பின்புறம் விசிறி விரிந்து, காற்றில் தோகைபோல் விறைத்து நின்று படபடத்தது. பிதுங்கிய சிற்பமென அங்க அவயவங்கள் நிமிர்த்துக்கொண்டு நின்றன. மின்னலின் வழி, விசும்பினின்றிழிந்த விண்ணுலகத்தவள் போலிருந்தாள் ஜலமேறி அடையாய்க் கனத்த கூந்தல். காற்றின் மிகுதியில் நrத்திர வால்போல் சீறிற்று. இவ்வியற்கையின் இயக்கத்தில் அவளும் சேர்ந்து இழைந்து, புயலுடன் நின்றாள். மின்னல் மறைந்தது. வெடவெடக்கும் குளிரில் பற்கள் கிலுகிலுப்பைக் கற்கள் போல் கடகடக்க ஆரம்பித்துவிட்டன. புயல் எங்களை வீட்டிற்குத் தள்ளிக்கொண்டு போயிற்று. உடலில் பிசினாய் ஒட்டிக்கொண்ட ஆடையைக் களைந்து வேறு உடுத்துவதற்குள் போதும்போதும் ஆகிவிட்டது. காலையில் எழுந்திருக்கையிலேயே வெகு நேரமாகி, விட்டது. உடல் கணுக்கணுவாய்த் தெறிக்கும் வலியில் எழுந்திருக்கக்கூட முடியவில்லை. அவள் எழுந்திருக்க வில்லை. 'கடற்கறைக்கு உலாவப்போனது எப்படியிருக் கிறது?' என்றேன். கண்கள் மூடியபடியே புன்னகை புரிந்தாள். அவசரமாய் வேலைக்குப் போனேன். தான் மாலை திரும்புகையில் வீட்டில் சந்தடியில்லை. கட்டிலில் நான் விட்டுப் போனபடியே படுத்திருந்தாள். கண் திறக்கவில்லை. பகீரென்றது. "என்னடி!' நெற்றியில் கை வைத்தேன். மழுவாய்க் காய்ந்தது. மூச்சிருந்ததேயொழிய பேச்சில்லை. கருமான் பட்டரை போல் ஆவியடிக்கும் அனல் மூச்சு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/373&oldid=741738" இருந்து மீள்விக்கப்பட்டது