பக்கம்:அவள்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

342லா. ச. ராமாமிருதம்



ஆனால், அப்போ எல்லாமே வெறும் கதைதானோ? கன்யாகுமரிக்குப் போய் வந்த உறவினர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், இரவு வேளைக்கு வாசல் திண்ணையில் ஒதுங்கிய பைராகிகள், யாத்ரிகள், கதை சொல்லி, மஹிமை சொல்லி, விசிறிவிட்ட வியப்பு, சென்னைக் கடற்கரையின் மாலைக் காற்றில் அந்திவானத்தின் வர்ண ஜாலங்களில், காலை வேலையில் கடல் விளிம்பில், சூரியனின் உதய வாயில், கரையோரம் ஒடத்தின் நிழலில், கட்டைமரத்தின் மேல் சாய்ந்தபடி சிந்தனையில் கொழுந்துவிட்டு, கண்டவர் கையோடு கொண்டுவந்த குங்குமம் கிளிஞ்சல் மாலை, சாய மண் என் கனவிற்கு கலவைகூட்டி, ஏக்கமாய்க் கட்டி, அதுவே அதிலேயே, அது வாய்ப்பந்தல் படர்ந்தது.

சூர்ய உதயம், அஸ்தமனம் இரண்டுமே குமரியில் காணலாமாமே!

அவள் மூக்குத்தியே மணிக்கூண்டாமே!

கன்யாகுமரி.

பேரிலேயே, பேருக்குள்ளேயே ஏதேதோ நீரோட்டங்கள் விளையாடுகின்றன. நெஞ்சை மீட்டுகின்றன.

அவள் குமரி! நான் குமரன்.

கடலோரம் கோவில், பாறை, பாறைகள், நெஞ்சிலும் பாறைகள். பாறைகளின் மேல் அலைகளின் மோதல்கள், சொல்லுள் அடைபடாது. என் கற்பனைக்கே சொந்தமான கதைகள், கவிதைகள், கதையின் நிழல்கள், நீழல் களின் காதைகள், கமகமப்புகள், கமகங்கள், இம்சைகள் சொல்ல முடிந்தவை, முடியாதவை. பேச்சில் முடிந்தவை, முடிந்தாலும் பங்கிட்டுக்கொள்ள மனம் வராதவை, சொல்லச் சொல்ல-இல்லை இல்லை தலை சுத்தறது.

கற்றட்டும். மாரடைக்கட்டும். வெடிக்கவே வெடிக்கட்டுமே! உயிர் போகாதவரை மார்புள் விண்விண் கன்யாகுமரி. கடன்காரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/386&oldid=1497798" இலிருந்து மீள்விக்கப்பட்டது