பக்கம்:அவள்.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

348லா. ச. ராமாமிருதம்



சிற்பியின் செதுக்கல் முடிந்து முழுமை கண்டதும் அவனையே காலால் உதைத்து தள்ளிக் கொக்கரிக்கும் செளந்தர்யம். கிணறு வெட்டப் பூதம். கல்லைச் செதுக்கிக் கன்யாகுமரி, கல்மேல் உளிபிடித்த கையை நடத்தியவளே நீதானோ? ஸஹிக்க முடியாத செளந்தர்யம் என்றால் அது இதுதான்.

போதும் போதும் தேவி, உன் அழகைக் காண எனக்கு அருகதை ஏது என்று கண்ணைப் பொத்திக் கொண்டால், உள் இமையில் அவள் ஏற்கெனவே நின்று சிரிக்கிறாள்.

இத்தனை நாள் காத்திருந்து என்னைப் பார்க்கத் தானே இவ்வளவு தூரம் வந்திருக்கிறாய்!

அபிஷேகம் அந்த முடியிலிருந்து அந்த உடலில் வழிகையில் அந்தந்த திரவியத்தில் பளபளக்கிறாள், ஜ்வலிக்கிறாள், மினுமினுக்கிறாள். மிளிர்கிறாள், ஒளிர்கிறாள், அங்கங்கள் பிதுங்குகிறாள், உள்ளத்தைச் சூறையாடுகிறாள். பாலருவி முகத்தை வெளிச்சமாக்கி, தோள்களில் வழிந்து, மார்க்குலையில் இழிந்து அடிவயிற்றில் அலைபிரிந்து, சொரிந்து பாதங்களை நோக்கி இறங்கு கிறது. குருக்கள் பரபரவெனத் தண்ணிரைச் சொம்பு சொம்பாய்க் கொட்டி அலம்பி, சட்டென சிலையின் ஒரு கையில் ருத்ராக்ஷ மாலையும் மறு கையில் கமண்டலத்தையும் கொடுத்துவிட்டார். ஆ என்ன நேர்ந்துவிட்டது? தோற்றம் சட்டென மாறிவிட்டது.

தேவி திடீரென நீலச் சுடராகிவிட்ட விந்தையை என்ன சொல்ல? அபிடேகப் போதின் வெகுளியும் சிரிப்பும் எங்கே?

உடுக்கையும் மாட்டியாகி விட்டது.

கன்யாகுமரி காஷாயினி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/392&oldid=1497780" இலிருந்து மீள்விக்கப்பட்டது