பக்கம்:அவள்.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

352லா. ச. ராமாமிருதம்



தோம்பும் பாவாடையில் கண்டதும், வயிறு ஒட்டிக் கொண்டது. இரண்டு கால பூஜை என்று பேர். நாட்டாமைக்காரிடமிருந்து தினம் இரண்டு படி அரிசி, அதுதான் சாமி நைவேத்யத்துக்கும் அவர் சம்பளத்துக்கும்.

தெய்வத்தின் தீன நிலை ஜம்பு குருக்களுக்குப் பலத்தைத் தந்தது. அல்லது அவருக்கே சமயத்துக்கு முகராசி வந்ததா? பார்க்க வேண்டிய இடங்களில், பார்க்க வேண்டியவர்களைப் பார்த்தார். கெஞ்சினார், அதட்டினார், கொஞ்சினார். முயற்சி ஒரளவுக்குத் திருவினை கண்டது. ஒரளவுக்குத்தான் அம்பாளுக்கு உடுக்கை மாற்ற முடிந்தது:

கமலாம்பிகே! என் குழந்தே'

ஆம், குழந்தைதான். மதமதவெனப் பதினாறு வயதுக் குழந்தை. வளர்த்திக்குக் கேட்பானேன்? தினே தினே எத்தனை நீராட்டல், எத்தனையெத்தனை ஸஹஸ்ரநாமங்கள் லக்ஷக்கணக்கில் சேர்ந்து அர்ச்சனையின் ஊட்டம்: சில சமயங்களில் தொங்கும் அகலில் சுடரின் நிழலாட்டத்தில் கல் ஒவியம் கண் திறந்தபடி சிரிப்பில் முன் பற்கள் இரண்டு லேசாய்த் தெரிவது போலும்-பரபரத்து நெருங்கி வந்து உற்றுப் பார்ப்பார். கல்லுக்கு அத்தனை நெகிழ்ச்சி ஸ்தபதியின் வெறும் கைத்திறன் மட்டுமல்ல, ஸ்வயார்ப்பணம். சிற்பி யாரோ? அவன் பேரும் அடையாளமும் தெரியாமல் இருப்பதால்தான் அவள் அநாதியாய், அத்தனை ஸௌந்தர்யவதியாய் விளங்குகிறாள்.

கமலாம்பிகை பற்றி அகிலாவுக்கு குருக்களின் படபடப்பு உண்டோ? யார் கண்டது? வெளியில் தெரிய வில்லை. சுபாவத்திலேயே அவள் கொஞ்சம் கெட்டி. வளவளவென்றிருக்க மாட்டாள். சற்று விரக்தியானவள் கூட. கோவிலில், தேவி வழிபாடில் தன் கணவனின் உற்சாக ஈடுபாடுடன் அவள் இழையாவிட்டாலும் அவளுக்கும் பக்தி உண்டு. ஆசாரம் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/396&oldid=1497768" இலிருந்து மீள்விக்கப்பட்டது