பக்கம்:அவள்.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஸ்த்ரீ 409

—உஷ், எங்கே போகிறாய்? போவது போலும் பொய் காட்டுகிறாய்!

நீ எங்கேயும் போகவில்லை. எங்கேயும் போக முடியாது.

நானும் உனை அடைய இயலேன், நீ அடைவதற்கில்லை.

என் உண்மையைக் கடைந்து, அதன் நேர்த்தியைச் சுவைக்கவே காத்திருக்கிறாய்.

காதலின் பந்தம், தன்மையே பரஸ்பரம் இதுதான்.

அவரவர் இதயக் கலசத்தைக் குடைந்து அதனுள் அமுதமே உன் உணவின் குறைந்த பட்சத் தரம், உன் உடல் புள்ளிகள் ஒவ்வொன்றும், நீ கொள்ளையாடும் கலசங்களினின்று தெறித்து, தெறித்த இடத்தில் ஊறிப்போன அமுதத் துளிகள்.

என் மரணமே! என் அமரமே!

மூச்சு, அசைவு, நினைப்பு, உணர்வு—இவை உயிர்ச் சக்தி உடலில் நிலவும் அடையாளங்களன்றி இவை மட்டுமே உயிர்ச் சக்தி ஆகா. அது எந்த விதம் வருவது, உருவெடுப்பது, புறப்படுவது, அதன் இஷ்டம். இந்நிலைகளின் கோர்வை—இவை என் வாழ்வின் ஜபமாயிருக்குமே அன்றி, தீர்வைக்கு அதற்குமே என்றுமே அப்பால் என்று கண்டும் இன்னும் சக்திக்குச் சலிப்பில்லை.

என் உயிர்ச் சக்தியே!

ஏன், மான் மேல் ஆசை கொள்ளலாகாதா? அது வக்கிரமா?

உயிரினம் ஒன்று விடாது, அசலனத்திலிருந்து தாவரம் வரை, தாவரத்திலிருந்து உயர் மனிதம்வரை ஒவ்வொன்றிலும் ஸ்த்ரீ இருக்கிறாள் என்பது சக்தியின் ஸத்யம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/453&oldid=1497397" இலிருந்து மீள்விக்கப்பட்டது